கல்யாணக் கனவு

மந்திர நாடாளும் மன்மதன் போலொருவன்
இந்திர னொத்ததோர் ஆணழகன் - செந்தமிழ்ச்
சுந்தர னாகத் திகழுமோர் காளையன்
வந்தெனைக் கைபிடிப் பான்

எங்கள் திருமணத்தின் நிச்சய தார்த்தமோ
திங்கள் நிறைபௌர் னமி!நாளில் - செங்குயிலும்
சங்கீதம் பாடிடும் காட்டின் நடுவிலொரு
பூங்காவி லேநடக் கும்

கல்யாண ஆடைகளோ வானில் தெரிகின்ற
வில்லினில் நூலைத் திரித்துஅதில் - மெல்லிய
புல்கொண்டு ஓவியம் தீட்டிய வண்ணங்கள்
எல்லாம மைந்திருக் கும்

என்னுடைய கல்யாண நாளின் நகைகளோ
பொன்னிறச் சூரியனை வெட்டிஅதில்-மின்னுகின்ற
மின்னல் இழைத்துப்பின் விண்மீன் பதித்ததன்
தன்மை மிகுந்திருக் கும்

நிலையிலா தென்றும் அசைவுகள் காணும்
அலைகடல் மண்வெளி தன்னில் - சிலைபோல்
கலைமகள் நான்வீற் றிருக்கஎன் கையில்
மலைபோல் மருதாணி தான்

பச்சிளம் வாழை மரங்கள் இரண்டெடுத்து
முச்சங்க மக்குமரி யில்கட்ட - கச்சணிந்த
உச்சிக்கொண் டைக்காரி எந்தன் திருமணத்தின்
அச்சுவெல்ல பந்தலமை யும்

என்னவனும் நானும் திருமணத் திற்குமுன்பு
பொன்னொளிர் நல்மாலை நேரத்தில் - சென்றாடி
நன்றிபல காதலுக்குத் தான்கூறி நின்றிடுவோம்
கன்னி எனைமறப்பேன் நான்

காலை வெளுத்ததும் வானத்து வில்லதுவின்
சேலை தனையுமே நானுடுத்தச் - சாலையில்
சோலை அடர்ந்த இடமொன்றில் என்தாயும்
பாலைஊட் டும்ஊஞ்சல் காண்

அதுமுடிந்தப் பின்னால் உலகிலுள் ளோரின்
பொதுகடல் மத்தியில் நாட்டின் - புதுமைப்
பதுமை எனக்குத் திருமணம் ! அங்கே
மதுபோல் சுரக்குமின் பம்

ஆதவன் சாய்ந்திடும் மாலைப் பொழுதிலே
காதல் மிகுந்திருந்த எங்களுக்குள் - மோதல்போல்
சாதனைகள் ஏற்படுத் தும்நலுங்கும் ! வெள்ளைநிற
மாதவப் பாற்கட லில்

நிலவங்கு வானத்தில் காய்ந்திட ! இந்த
உலகமும் மெல்ல உறங்கக் - கலங்கும்
அலங்காரம், விட்டு ஒதுங்கும் ஆடை,
புலன்விளை யாடும்நே ரம்

-விவேக்பாரதி
25.04.2014

Comments

Popular Posts