விநோதம்

பள்ளி மாணவர்க்கு
வகுப்பு வேளை விடுப்பு !

பாவலர்க்கு
பாவில் ஈற்றடி எடுப்பு !

நீச்சல் பழகும்
நீள்கடல் மீனுக்குத் துடுப்பு !

வறுமையின் நிழலில்
முழுதும் எரியும் அடுப்பு !

-வினோதம் ! ஆம் வினோதம் !

கற்றவர் என்றால்
பேசும் மொழியில் பிழை !

சஹாராவிலோ
ஆலங்கட்டி மழை !

கைம்மாறு இன்றி
பட்டுப்பூச்சி தரும் இழை

மழை வெய்யில் தாங்கியும்
பண்பட இசைக்கும் கழை !

- வினோதம் ! ஆம் வினோதம் !

வெளுத்துச் சிவந்துக்
கருமை பூணும் வான் !

கடவுள் வரைந்த
ஓவிய உடலின் மான் !

எச்சில் என்றாலும்
இச்சையைத் தூண்டும் தேன் !

ஏதோ பேசிக்
கவிதை யெனச்சொல்லும் நான்

- வினோதம் ! ஆம் வினோதம் !


-விவேக்பாரதி
24.02.2015

Comments

Popular Posts