எழில் எங்கள் காவிரியே

ஆற்றங் கரையினிலே ஆர்பரித்து நீர்பாய
காற்றுங் கவின்முகிலை கண்டு நகர்த்திவிட
ஊற்றுஞ் சுரக்குமிடம் உற்சாகம் ! நீரலைகள்
நாற்றை அசைப்பதுவும் நாற்புறமும் ஆனந்தம் !
ஆற்றில் குளித்துவிட ஆழத்தை நானறிந்
தேற்ற விசையோடு ஏறிநான் குத்திக்கும்போழ்
தாற்றல் மிகவோடு தன்னுடைப் பொற்கரத்தால்
ஏற்றாள் எனையும் எழிலெங்கள் காவிரியே !

பாய்ச்சல் மிகவுண்டு பாடுங் குயினத்தின்
கூச்சல் மிகவுண்டு கூட்டம் மிகவுண்டு
பூச்செடி தந்திடும் பூரிப்பும் அங்கதிகம்
கீச்சுக் கிளிவண்டும் கின்னரமும் அங்கதிகம்
நீச்சல் அறியாதேன் நீர்பாயும் வாய்க்காலின்
மேய்ச்சல் நிலம்தொட்டு மேன்மைச் சுகமெய்தப்
பாய்ச்சல் புரிந்தேனே ! பாழ்நீரில் மீன்திட்டும்
ஏச்சுந்தான் கேட்கும் எழிலெங்கள் காவிரியே!!

-விவேக்பாரதி
13.09.2015

Comments

Popular Posts