கண்ணனும் மாலையும்


பாருடைய மக்களே 
   வந்து இத்தனைப் பாரீர் !!
காருடைய கண்ணன் 
   பொன்னொளிர் மாலையில்
ஊருடைய கானகத்தில்
    மாடுகளை மெய்த்துவிட்டு
தெருடைய மன்னன் போல் 
   நகர் வரும் அழகினை !!

திண்ணமும் உடைய 
   தோழன்!கண்ணன்
எண்ணமும் உயர்வாய் 
   எழுந்திட வந்தான்-நீல
வண்ணமும் பொன்னும் 
   அணிந்து கோபியர்
கண்ணமும் சிவக்க 
   நாணிட வைத்தான் !!

ராதையைக் கவர்ந்த 
    கள்வன் கண்ணன்
கோதையை நூலாடும் 
   பாவையைப் போலே
காதைகள் சொல்லி 
   ஆட்டி வைத்துவிட்டு
பேதைப் பெண்ணடி 
   நீயென்று சொன்னான் !!

மணிவண்ணக் கண்ணன் 
   மரத்தடியில் நின்றான்
பணிவிழும் பொழுதினில் 
   வேய்ங்குழல் கொண்டு
கனியொத்த கீதம் 
   படித்துக் கர்வப்
பிணியை மனத்திலிருந்து 
   விரட்டச் செய்தான்

வானிலும் மிதக்கும்
    போர்மேகக் கூட்டம் -எங்கு
காணிலும் கண்ணன் 
   எழில்மிகு தோற்றம்
விண்ணில் ஆடும் 
   மாறனின் அழகொப்ப
சென்னியில் தொங்கின 
  குண்டலம் அழகாய்

சந்தனத் திலகம் 
   அணிந்த கண்ணனை
வந்தனம் வந்தனம் 
    வருக வருகவென்று
நந்தனக் கோமான் 
   நாட்டினர் யாவரும்
அந்தணன் மறைமொழி
   கூறி வாழ்த்திடவே !! 

மாலையும் வந்தது 
   இன்பமும் வந்தது ! 
ஜாலமே வந்தது !!
   காற்றுடன் வந்தது !! 
கோலமாய்க் கண்ணனின் 
   கோகிலம் வந்தது !! 
காலெல்லாம் ஆடிடக் 
   காதலும்  வந்ததே ! 

-விவேக்பாரதி 
14.10.2013

Comments

Popular Posts