புத்தாண்டு வாழ்த்து - 2016

பிறக்கப் போகும் புத்தாண்டு
    பிரிய மான புத்தாண்டு
பறந்து வந்து வானத்தில்
    பரிதி யாகப் பூத்திடுமே !
சிறந்த பலன்கள் இதற்குண்டு
    செப்பு கின்றாள் காதுகளைத்
திறந்து வைத்துக் கேளுங்கள்
    திமிராய்ச் சொல்வாள் ஆண்டுப்பெண் !


உழவர் வாழ்வில் நலம்வருமாம்
    உயிரி ழப்பு குறைந்திடுமாம்
புழங்கும் பணமோ செல்போனில்
    புதுப்பரி மானம் கொண்டிடுமாம்
முழங்கும் புயலோ இடிமழையோ
    முயற்சி ஒன்றே வென்றிடுமாம்
வழங்கும் இந்தப் புத்தாண்டின்
    வாய்ச்சொல் தன்னைக் கேளுங்கள் !

தமிழர் வீரம் சபைவருமாம்
    தடுக்கும் கயவர் தலைவிழுமாம்
அமிழ்தத் தண்ணீர் கிடைத்திடுமாம்
    அமைதி மக்கள் மனத்துறுமாம்
தமக்கே எல்லாம் என்பவரோ
    தள்ளப் படுவது சிறையினிலாம்
நமக்காய் வந்த புத்தாண்டின்
     நல்ல பேச்சைக் கேளுங்கள் !

செய்ய வேண்டி இருப்பவற்றைச்
    செய்து முடிக்கும் கடமைக்கும்
கையை நீட்டும் பழக்கத்தைக்
    கடைசி யாகப் பார்த்திடுவீர்
பெய்யப் போகும் புத்தாண்டில்
    பெறவே மாட்டீர் இவ்வெண்ணம் !
உய்ய வந்த புத்தாண்டின்
    உரைகள் தன்னைக் கேளுங்கள் !

இரண்டா யிரத்துப் பதினேழாம்
    இனிய மக்காள் முன்கூடித்
திரண்டு வந்து சேர்ந்திடுவோம்
    தினமும் பூக்கும் புத்தாண்டு !
வரத்துக் கெல்லாம் வரமெனவே
    வந்த திந்த ஆண்டென்றே
சிரத்தில் எண்ணிச் செயல்படுவோம்
    சிறப்பை எல்லாம் கண்டிடுவோம் !

வாசல் திறந்து வரவேற்று
    வாழ்நாள் பயனும் யாதென்று
யோசித் திங்கே அதைசெய்து
    யோகம் தன்னைப் பெற்றிடுவோம் !
மாசும் நீங்கும் மனத்திடையே
    மரியா தைகள் வளர்ந்திடுமே
வீசும் ஒளியாம் புத்தாண்டை
    விரிவாய் ஏற்போம் ! வாழ்வோமே !

-விவேக்பாரதி
31.12.2016

Popular Posts