தமிழ்ப் புத்தண்டு 2017

கருமை வானம் வெளுத்தது - அதில்
   கதிரின் ஜோதி துளிர்த்தது
வரமாய் ஆண்டும் மலர்ந்தது - இது
   வரத்தான் காலை புலர்ந்தது !

இன்னல் எல்லாம் இடிந்தது - நம்
   இருளும் நீங்கி விடிந்தது
மின்னல் கைக்குள் அடைந்தது - தீ
   மிடிமை எல்லாம் உடைந்தது !

உழவர் பெருமை உயர்ந்தது - அவர்
   உணர்ச்சி வானைப் பிளந்தது !
அழகே எங்கும் அமைந்தது ! - மதி
   அதுவாய் விரிந்து வளர்ந்தது !

ஞானம் கல்வி நிலைத்தது - இதை
   ஞாலம் கண்டே மலைத்தது
மானம் வீரம் புரிந்தது - நம்
   மரியா தைகள் தெரிந்தது !

இனிமேல் வசந்தம் பக்கத்தில் - நம்
   இடர்கள் ஓடும் வெட்கத்தில் !
கனிந்த இந்தப் புத்தாண்டில் - நம்
   கடமை செய்வோம் ! வாழ்வோமே !

-விவேக்பாரதி
12.04.2017

Popular Posts