இவன் கவிஞன்

சூழ்நிலைக் குள்ளிங்கு சுற்றித்தி ரிந்திடும்
    சூக்குமம் கற்றவ னேகவிஞன் - வந்த
சூழ்நிலை தன்னைச் சுழற்றி யெதிர்விசை
    சுட்டியு யர்பவ னேகவிஞன் !

ஆழ்நிலை யோகம்,தி யானப்ப யிற்சிகள்
    அள்ளிக்கொ டுக்கும மைதியினை - எந்தப்
போழ்திலும் பெற்று முகிலாய்க் கவிகள்
    பொழிந்துவ ளர்பவ னேகவிஞன் !

கூடுவிட் டுக்கூடு தாவிடு வானவன்
    கொள்கையி லாநிலை மேவிடுவான் - எங்கும்
தேடிக்கி டைப்பதற் கில்லையெ னும்வணம்
    தேவவி சித்திரந் தூவிடுவான் !
ஆடும் மனத்தை அடக்கிச்சி றந்திட
    ஆனவ ரைக்கும் நெருங்கிடுவான் - நெஞ்சத்
தோடிடும் போட்டியில் கொஞ்சந்த ளர்பவன்
    தோற்றுக் கவிக்கனல் சேர்த்திடுவான் !

வாழ்த்திடும் போதிறை யாகிடு வானெழில்
    வார்ப்பைப் புகழ்கையில் ஓவியனாம் ! - வாழ்வில்
ஏழ்மைநெ ருங்கினும் என்றும்மூ டத்தினை
    ஏற்காத் தனித்திறம் மேவிடுவான் !
ஊழ்வினை நீங்க உயர்ப்பொருள் தாளிடை
    ஊன்றிக் கவிதை வழங்கிடுவான் ! - "நானும்
வீழ்ந்திடு வேனென எண்ணல் பிழை"யென்று
    வீரமும் பொங்க முழங்கிடுவான் !

- விவேக்பாரதி
15.03.2017

Popular Posts