காலத் திருடன்

தூக்கத்தைப் போல்திருடன் தோன்றுவது மில்லையடா
ஆக்கம் அழித்தல், அமைவேகம் நீக்கிடுதல்,
உள்ளே எழுகின்ற உற்சாக வண்டிதனைப்
பள்ளத் திடைகவிழ்த்தல், பாடுபல செய்தலென
வாழ்க்கைக் கிழிவுதரும் தூக்கத்தின் மோகத்தில்
ஆழ்ந்திடுவார் போலோர் அறிவிலிதா னில்லையடா !
சேர்க்கின்ற செல்வங்கள் சென்றாலும் மீண்டுவரும்
பேர்புகழ் செல்வாக்கு பெற்றிடலாம் இத்தோடு
நல்லமனம் நல்லகுணம் நாளும் உழைக்கும்பதம்
எல்லாமும் சென்றால் எளிதாக மீட்டிடலாம்
ஆனால் இவற்றை அழித்துக் கவராது
தானாய் வருகின்ற தன்மையிலா இவ்வரக்கன்
சென்றால் திரும்பாத சேர்த்துவைக்க வொண்ணாத
மின்னேர் பொருளாம் மிளிர்கின்ற காலத்தை
நம்மிட மிருந்துமிக நாசுக்காய் கொள்ளையடித்
தம்மாவோ சிக்கல் அமைத்திடுவான் ! இத்திருடன்
காலத் திருடன் கடமைத் திருடனிவன்
வேலைத் திருடன் வெறும்பொழுதை ஆக்கிடுவான்
சுற்றித் திரியும் சுறுசுறுப்புத் தீ,திரியில்
பற்றவிடா தத்திரியைப் பாழாய் நனைத்திடுவான் !
கெட்டமனச் சிக்கல், கெடுக்கும் துயர்நீட்டம்,
பட்டரண மாறாத பாங்கெல்லாம் பேயாக
சிந்தை மிரட்டச் சிறப்பா யதைத்திருடி
நிந்தனை மாய்க்க நிதம்வருவா னென்றாலும்
கொஞ்சமிவன் செய்கைக்குக் கொள்கை மறந்தோமேல்
வஞ்சகனோ செல்கின்ற வாழ்வைத் திருடிடுவான் !
சோம்பல், மறதி, சொகுசு, செயல்விலக்கல்,
தேம்பல், பொழுதின் தெளிவிழத்தல், செய்கையிலே
காலத்தைத் தாழ்த்துதல், காணுங் கனவுநம்பி
கோலநிகழ் காலத்தைக் கொன்றிடுதல் எல்லாமே
தூக்கத் திருடன் துவக்கும் நடனங்கள் !
ஏக்கத் திடைநம்மை எப்போதும் நிற்கவைத்
தல்லல் படுத்து மவனை விரட்டிடவே
சொல்லில் சுடரும் சொலிப்பாவாள் சக்தியவள்
பாதம் பிடிக்காது பக்தியொடு நான்சென்று
காதுக் கிடுக்கினிலே கண்ணியமாய்ச் சொல்லிடலாம்,
சொன்னால் பயன்வருமோ? சொல்வீர் ! திருடனைத்தான்
வென்ற உலகீரே வேகம் ! உதவிடுவீர் !
கண்ணைச் சுருக்கிக் கருதுவதை மங்கவைத்து
வண்ணம் புனைந்து வரச்சொல்லிக் கூப்பிட்டுக்
கானலென விங்கே கனவுகளைக் காட்டுகிறான் !
மோனமெனும் ஒன்றை முழுதாய் நமதுவசம்
பற்றி இழுத்துப் பதமாகச் சீராட்டி
ஒற்றைப் பிராணியென ஒண்மையினா லேதிருத்தி
காலங் கருதல் கடமை நினைதலென
வேலை கொடுத்துவிட்டால் வேண்டுவதுங் கைவருமோ ?
தூக்கத் தரக்கனைத் தோற்கடிக்கும் நல்லவழி
கேட்கும் சிறுவனுக்குக் கேண்மையீர் கூறீரோ ? 


-விவேக்பாரதி
02.06.2017

Popular Posts