தவமென்ப

முற்றும் துறந்து முனிவனெனும் பேரால்
பற்றற் றிருக்கும் பக்குவத்தைத் தவமென்பார் !

இல்லறம் துறந்துடன் இன்பநிலை அதுதுறந்து
சொல்செயல் துறந்து சுகம்துறத்தல் தவமென்பார் !

கற்றைச் சடைவளர்த்துக் காடுசுற்றி குகையமர்ந்து
குற்றமற வாழ்தல் கொள்கைகொளல் தவமென்பார் !

தன்னைத் தேடித் தானலைந்து ஓரிறையை
முன்னே நிறுத்த முனையுதல் தவமென்பார் !

உண்பது நாழி உடுப்பதி ரண்டெனப்
பண்பட வாழப் பழகுதலைத் தவமென்பார் !

அற்பப் பொருளில் ஆனந்தம் கண்டுகொண்டு
முற்பிறப் புணர முயற்சித்தல் தவமென்பார் !

ஐம்புல னடக்கி ஐயம் அழிவுறவே
மொய்ம்புற விருக்கும் மோனநிலை தவமென்பார் !

அன்பால் உலகளந்து அறிவால் பிறவறிந்து
மன்னவர்க்கும் விண்ணவர்க்கும் மயங்காதல் தவமென்பார் !

ஓரிட மமர்ந்தும் ஒருசிந்தை மேற்கொண்டும்
பேரண் டத்தைப் பெற்றறிதல் தவமென்பார் !

ஞானக் குளத்திடை ஞாலவாழ்வு கண்டுணர்ந்து
வானப் பதவி வளைத்திடுதல் தவமென்பார் !

பித்த னென்றும் பேதையென்றும் ஊர்பேச
மெத்த வொருசிரிப்பு மேற்காட்டல் தவமென்பார் !

சும்மா இருந்து சுற்றுலக நல்லறிவை
இம்மா நிலத்தடைதல் இனியதவம் என்பாரே.. !

- விவேக்பாரதி
16.01.2015

Popular Posts