தேட மறந்து போனோம் !

தேட மறந்து போனோம் - நாமேன்
    தேட மறந்து போனோம் ?
நாடு முற்றி லுந்தான் - இருந்த
    நலத்தைத் தேட வேண்டும்
காடு தேட வேண்டும் - நல்ல
    கவிதை தேட வேண்டும்
சீடன் குருகுலங்கள் - எல்லாம்
    சிறப்பில் தேட வேண்டும்

தேட மறந்து போனோம் - நாமேன்
தேடி மறந்து போனோம்

பசுமை தேட வேண்டும் - மனதில்
    பணிவு தேட வேண்டும்
அசைந்தி டாத நெஞ்சம் - பொங்கும்
    அன்பு தேட வேண்டும்
விசையைத் தேட வேண்டும் - மொழியில்
    வீச்சு தேட வேண்டும்
நசுக்கும் தீமை விட்டு - நீங்கி
    நம்மைத் தேட வேண்டும் !

தேட மறந்து போனோம் - நாமேன்
தேடி மறந்து போனோம் ?

தேடல் என்பதைத் தான் - வாழ்க்கை
    தேவை என்று சொல்லும்
தேடல் என்பதைத் தான் - பயணம்
    தேர்வு செய்யச் சொல்லும்
தேடித் தேடித் தீர்ப்போம் - வயதைத்
    தேய வைத்துப் பார்ப்போம்
தேட லற்ற நெஞ்சம் - கெட்டுத்
    தேங்கும் குட்டை யாமே !

தேட மறந்து போனோம் - நாமேன்
தேடி மறந்து போனோம் ?

-விவேக்பாரதி
18.06.2017

Popular Posts