எப்படித் தோணும் ??

மாத்திமாத்தி ஆடுறாங்க சதுரங்க ஆட்டம் ! இதுக்கு
    மத்தியிலே வாடுறது மக்களின் கூட்டம் !
ஏத்திவிட்ட மக்களத்தான் யாரும் நெனைக்கல ! இவங்க
    எப்போதும் அடிச்சுபிடுங்கும் பணமோ கணக்கில்ல ! 


உண்மையெது உளறலெது தெரிஞ்சிக்க வேணும் ! நம்மள
    உப்புக்கு சப்பா ஆக்குறான்னு புரிஞ்சிக்க வேணும் !
கண்ணசரும் நேரத்துல காட்சி மாறுது ! கண்டக்
    களவாணிக் கூட்டமெல்லாம் ஆட்சி யேறுது !

அதிகார ஆசையிலே ஆட்டம் காட்டுறான் ! ஊரில்
    அவனவன தலைவருன்னு மேல தூக்குறான் !
பதவிக்கான சண்டையில பாவ மக்கள ! இந்த
    பாசங்குப் பயலுகதான் எண்ணிப் பாக்கல !

புரளிசொல்லும் குறளிவித்த காட்டு றானுங்க ! காசு
    பொழங்குபோது சேர்ந்துகம்பி நீட்டு றானுங்க !
அரசியலாம் பொதகுளியாம் ! பயத்தக் காட்டியே ! நல்லா
    அடிச்சு அடிச்சு தின்னுறாங்க நம்ம நாட்டிலே !
 
ஏரெடுத்தவன் மேலஏறி நின்னுட வேணும் ! பேனா
    எடுத்துவந்த இளைஞரெல்லாம் சேர்ந்திட வேணும் !
பாராள யாருன்னுநாம் சொல்லிட வேணும் ! இதப்
    பண்ணிப்புட்டா கொள்ளையடிக்க எப்படித் தோணும் ??

-விவேக்பாரதி
08.02.2017

Popular Posts