கண்ணா சவுக்கியமா ?

கண்ணா கண்ணா சவுக்கியமா - உன்
   கவிதைக் குழல்தான் சவுக்கியமா ?
பண்ணில் அமுதம் படைப்பவனே - பல
   பாவைய ரோடு நடிப்பவனே !

பெண்கள் மனத்தில் வசிப்பவனே - பொய்ப்
    பேடித் தனத்தை முடிப்பவனே
விண்ணோர் போற்றும் ஆயவனே ! - என்
    விண்ணப் பங்கேள் மாயவனே

ஐந்து தலைகள் எனக்கில்லை - என்
   ஐயனே என்றன் மேலாடு !
நைந்து போகும் துன்பங்களை - விரல்
   நசுக்க லாலே நீபோக்கு !

கந்தல் இல்லை அவலில்லை - எனில்
   கஷ்டம் உண்டடே என்கண்ணா !
வந்தணைத்துக் நீ காப்பாற்று - என்
   வாட்டத்தைப் போக்கி நீ தேற்று !

வெண்ணெய் இல்லை பாலில்லை - மன
   வேதனைகள் பலவுண்டு !
கண் குளத்தினில் நீருண்டு - மனக்
   காட்டுக்குள்ளே போருண்டு !

உண்மை சொல்ல முடியாமல் - பொய்
   உரக்கச் சொல்லத் தெரியாமல்
மண்ணில் வாழும் என்வாழ்வை - நீ
   மாசில்லாமல் நேராக்கு !

என்ன நடனம் எழிற்கோலம் - உள்
   எங்கும் உன்றன் முகஜாலம்
இன்னல் தீர்க்கும் உன்ரூபம் - எனக்
   கின்பம் சேர்க்கும் பொன்ரூபம் !

மின்னல் போன்ற குழலாலே - இசை
    மீட்டி வைப்பாய் மண்மேலே !
என்னை உன்றன் பதம்வைத்தேன் - இனி
    ஏற்ப தென்பது உன்கடனே !

படம் : சுதன் காளிதாஸ்

-விவேக்பாரதி
17.05.2017

Comments

Popular Posts