பாட்டென்று

பாட்டென்று நினைத்தே பட்டென்று உவந்தேன்
   பாடலில்லை ஒற்றைச் சேதியில்லை !
கூட்டமுத மென்றே குதித்தோடி வந்தேன்
   குழையவில்லை நெஞ்சம் நிறையவில்லை !

எதைவிட்டு வந்தே எதைத்தொட்டுச் செல்ல
   எழில்வீணைதான் மண்ணில் இசைபாடுதோ ?
இதைக்கேட்டு நெஞ்சம் இங்கே துடிக்க
   இசைராணியின் வாயில் நகையாடுதோ ?

கவியொன்று வந்து கனியாமல் போனால்
   கனலாவதை நானும் எவண்சொல்வதோ ?
நவமாக சிந்தை ஒளியேறி சற்றே
   நகராமலே நிற்ப தெவண்சொல்வதோ ?

சொற்கட்டுகள் என்னும் புற்கட்டுகள் வந்து
   சோதனையு மாவ தழிந்தோடுக !
விற்கட்டிலே பாயும் விசையம்புகள் வந்து
   விந்தையென் றேஎன் உளம்சேருக !!

-விவேக்பாரதி
05.07.2017

Popular Posts