சந்திப்பு

பகலிறவின் சந்திப்பே மாலை யாகும்
   பாவலர்கள் சந்திப்பே பாவ ரங்கம்
முகிலினங்கள் சந்திப்பே இடிமு ழக்கம்
   முத்தமிழில் சந்திப்போ புணர்ச்சி ஆகும்
பகைவர்களின் சந்திப்போ போர்க ளத்தில்
   பழவகையின் சந்திப்போ பஞ்சா மிர்தம்
முகையினத்தார் சந்திப்பே பள்ளி ஆகும்
   மூறல்களின் சந்திப்பே நாண மாகும் !

உதடுகளின் சந்திப்பே முத்த மாகும்
   ஊற்றுகளின் சந்திப்பே ஆறென் றாகும்
கதவுகளின் சந்திப்பே கிடக்கும் பூட்டு
   கவிதைகளின் சந்திப்பே கவிதை நூலாம்
மதங்கொள்ளும் சந்திப்பே சமத்து வத்தேன்
   மலரினத்தின் சந்திப்பே கதம்ப மாகும்
புதுமைகளின் சந்திப்பே தொழிலின் நுட்பம்
   புஞ்சைகளின் சந்திப்பே கழனி யாகும் !

-விவேக்பாரதி
08.06.2016

Comments

Popular Posts