வேகம் வேகம்

எங்கும் வேகம் எதிலும் வேகம்
   எல்லாம் வேகம் வேகமடா !
தங்கும் புவியின் சுற்றல் துவங்கித்
   தாரணி யெங்கும் வேகமடா !

படிப்பில் வேகம் ! படிக்கும் முன்பே
   பாலர் பள்ளியில் சேர்க்கின்றார் !
அடுப்பில் வேகம் ! நொடியில் சமையல்
   ஆகிட வேயெதிர் பார்க்கின்றார் !

நடந்தால், வேகம் போதா தென்பார்
   நகரத் தேவை வண்டியென்பார் !
கடவுளைக் காணக் கோயில் சென்றால்
   கடுகிப் போ!"சரி கண்டி"யென்பார் !

சாலை யெங்கும் வாகன வேகம்
   சாத்தா னாகப் பாய்கிறது !
வாலை யிழந்த வானர மெல்லாம்
   வண்டியில் விரைவாய் மேய்கிறது !

ஆலையில் வேகம் ! ஆட்களை நீக்கி
   அமைக்கு தங்கே எந்திரத்தை !
காலையில் துவங்கி ஊரே சொல்லும்
   காதில் வேக மந்திரத்தை !

பணியில் வேகம் ! வேலை பார்க்கப்
   பாழாய் லஞ்சம் கேட்கிறது !
துணிவில் வேகம் ! அதுதா னில்லை
   துன்பத் தின்முன் தோற்கிறது !

தெருவில் எங்கும் வேகம் காண்பீர் !
   தேவை தானா சொல்லிடுவீர் !
கருவில் வேகம் கண்டால், உலகைக்
   கண்டிருப் பீரோ எண்ணிடுவீர் !

-விவேக்பாரதி !
09.06.2016

Comments

Popular Posts