நிலவிடம் கேட்பது

நிலவே உன்னிடம் நானிது கேட்பேன்
       நிச்சயம் செய்திட வேண்டும் - என்றன்
   நினைவினில் எல்லாம் தங்கிடும் அவளை
       நீசென்று கண்டிட வேண்டும் ! 

உலகினில் அவள்போல் அழகியில் லையென
       உளறிடும் கவிஞனும் இல்லை ! - மன
   உணர்வினுக் கவள்போல் உயர்ந்தவ ளிலையென
       உண்மையில் சொல்லிடும் கிள்ளை !       
கலக்குறும் போது கவிதையின் வடிவில்
       கண்களி லேயொளி கொடுப்பாள் - நெஞ்சில்
   கனன்றிடும் தீயாய்க் கடந்திடுங் காற்றாய்
       காலமெல் லாமவள் இருப்பாள் ! 

மலரென நெஞ்சில் மகிழ்வுடன் பூப்பாள்
       மதியினி லேவிசை சேர்ப்பாள் - காதல்
   மங்கையைக் கண்டால் மருண்டிடும் என்னை
       மாலையில் நினைத்திடச் சொல்வாய் ! - என்னை
       மதியினில் சேர்த்திடச் சொல்வாய் !

-விவேக்பாரதி
12.05.2017

Popular Posts