வயதும் மனதும்

தென்றல் வந்தென் நெஞ்சினைத் தீண்டும் !
    தேடும் அலைகள் கால்களைத் தீண்டும் !
மன்ற நிலவு பார்வையைத் தீண்டும்
    மலரின் வாசம் நாசியைத் தீண்டும்
அன்பி லிவையும் தீண்டிடும் போது
    அடிமை நெஞ்சம் இதையறி யாது
கன்னி தீண்டிட ஏங்கிடும் வயது
    கவிதை பாடித் திரிந்திடும் மனது !


அருகில் தெய்வம் வாவென அழைக்கும்
    அறிவு ஞானம் அணைத்திடத் துடிக்கும் !
பெருகும் புகழும் பாசமும் உறவும்
    பெயரும் பணமும் சுற்றிலும் நடிக்கும் !
உருகி இவைதான் நின்றிடும் போது
    ஊமை நெஞ்சம் இதையுண ராது !
மருளு மிந்த மடமன மிங்கே
    மங்கை தீண்டும் வரையினி லேங்கும் !

உண்மை அன்பைக் கண்டது மில்லை
    உலகி லதனைக் கொண்டது மில்லை
கண்ணில் காணும் காட்சியி லெல்லாம்
    காதல் தேடிக் கசிந்திடும் பிள்ளை !
பெண்ணின் மீதே மோகம் கொண்டு
    பேருக் காணென் றலறிடும் கிள்ளை !
பண்ணில் சொல்லும் தன்னிலைச் சொல்லை
    பாட லுக்கோர் பதிலுரை இல்லை !

-விவேக்பாரதி
16.05.2017

Popular Posts