தாய்மை போற்றுதும்

போச்சு துயரெல்லாம் பொய்யாச்சு அன்னையின்
பாச்சுவை சொல்முன் பனியாச்சு ! - காய்ச்சிய
பாலாய் அருள்மொழிகள் பாட்டாய் உரைத்தெனையே
தாலாட்டித் தாங்கினாள் தாய் ! (1)

சிறப்பினை நானடைந்து சீர்பெறவே அன்னை
பொறுப்பாய் இருந்த பொழுதும் - பெறற்கரிதே
என்தேர்வுக் காக எழில்கண் அவள்விழிப்பாள்
இன்னுபல செய்வாள் இசைந்து ! (2)

அணைப்பாள் உயிராய் அரவணைப்பாள் ! தாயும்
துணையாய்த் தினமும் தொடர்வாள் - பிணைந்திடும்
சோற்றினை மையாய்க் குழைத்துத்தான் ஊட்டிடுவாள்
போற்றுகிறேன் தாய்தாளில் போந்து ! (3)

ஆங்காங் கிருக்கும் அனைத்துக் கடவுளரும்
ஓங்கியிங் கோருருவில் ஒன்றானால் - தாங்குகின்ற
தாயின் உருகொள்வார் ! தாயோ மகனுக்கோர்
நோயின் அவளெடுப்பாள் நோன்பு ! (4)

நன்றாக நான்வளர நாளு மவள்நொந்தாள்
கன்றான என்னைக் கதிசேர்த்தாள் - குன்றேறி
வீசும் விளக்காய் வியனுலகில் மின்னவைத்தாள்
பேசல் அவள்புகழைப் பேறு ! (5)

தேர்ந்தே உணவளிப்பாள் ! தேடிச் சுகம்பலவும்
சேர்ந்திடும் நன்மைச் செலவழிப்பாள் - ஓர்ந்தவளின்
ஒண்பதம் பற்றினால் ஓங்கிநாம் வாழலாம்
தண்பதம் தாயவள் தாள் ! (6)

உழைப்பாள் நமக்காக ஊறுற்ற போதும்
அழைக்காள் ஒருநாளும் அம்மா ! - கழைநம்மை
வெட்டிச் செதுக்கி வெகுவழகாய்ப் பண்படைப்பாள்
குட்டுவாள் தப்பைக் குறைத்து ! (7)

சிந்தும் மழையால் சிலிர்க்குமே வையமும் !
அந்தமே யில்லாத அன்னையினால் - சந்த
முலகடையும் சாந்த உருவுபெறும் பாரில்
கலைவளர ஓங்கும் கதி ! (8)

ஈடாக அன்னைக்கு மீங்கெவர்தா முள்ளாரோ
பாடான பாடு படும்போதும் - வீடேதான்
முக்கிய மென்பாள் முழுமனத்தோ டேயுழைப்பாள்
அக்கினி யாவாள் அணங்கு ! (9)

தேனான சொற்கள் தெவிட்டாமற் பேசிடுவாள்
ஊனோடு தந்தாள் உயிர்துடிப்பை - வானாக
என்சிறகு தன்னை எழிலாய்த் திறந்தவளால்
பொன்னாய் மிளிர்வேன் பொலிந்து (10)

-விவேக்பாரதி
09.05.2016

Comments

Popular Posts