என்னே இயற்கை எழில்

என்னே இயற்கை எழிலெல்லாம் ! கண்டாலே
கன்னல் கரும்பாகக் காட்சி இனிக்கிறது !
மண்ணில் துவங்கி மழைத்துளியி லேதொடர்ந்து
விண்ணின் விளிம்புவரை விந்தைமிகு மற்புதங்கள் !
பச்சை வயலில் பதித்தொரு கால்வைத்தே
இச்சைக் கினிய இசைகொடுக்கும் கொக்கினங்கள் !
கொக்கின் இசைகேட்டுக் கொள்கை மறந்தனவாய்ப்
பக்கம் நெருங்கிவந்து பார்க்கும் மடைமீன்கள் !
சுற்றிலுமே வாலைச் சுழற்றி அடித்தபடி
நெற்றி புடைக்க நிமிர்ந்திருக்கும் ஆனினங்கள் !
கீச்சலிடும் சில்வண்டு ! கீற்றருகே நின்றபடி
கூச்சலிடும் கோட்டணில்கள் ! கொவ்வைக் கிளியினங்கள் !
சோலைக் குளிர்மலர்கள் ! சொக்கி அதில்வீழ்ந்து
மாலை வரைக்கும் மதுவுண்ணும் தேனீக்கள் !
பூச்சியிடும் ரீங்காரம் ! புல்லின் தலையணியும்
ஆச்சரியப் பாகை ! அழகான வெண்பனித்தூள் !
வெண்பனி தன்னில் வெகுவழகாய்க் கண்களுக்குத்
தெண்பட்டு நிற்கின்ற தென்னை மரத்தோப்பு !
பேருருவாய் ஆசை பெருக்குகின்ற மாமலைகள்
நீருருவி ஓடும் நிலாவண்ணத் தோரருவி !
என்னே இயற்கை எழிலெல்லாம் ! கண்டாலே
கன்னல் கரும்பாகக் காட்சி இனிக்கிறது !
யாவும் எவர்செய்தார் ? யார்தான் இதற்கதிபர் ?
பூவும் மணமும், புயலும் பெருமழையும்,
நீரும் நிலமும், நிலவும் உரைபனியும்
சேர்ந்திருக்கச் சொன்னதுமார் ? சேர்த்திருத்தி வைத்ததுமார் ?
யார்தார் இதற்கதிபர் ? யாவும் எவர்செய்தார் ?
என்னே கணக்குகள் ? என்னே அளவுகள் ?
என்னே அழகுகள் ? எத்தனை கற்பனைகள் !
பூவுக்குள் தேனைப் புதுக்குவதார் ? புல்மேயும்
ஆவுக்குள் பாலைத்தான் அன்றாடம் சேர்ப்பதுமார் ?
இங்கிவை யெல்லாம் இயற்கை, வேதாந்தம்
துங்க அறிவியலும் தோன்றி உரைக்கின்ற
ஆதிப் பரம்பொருளாம் அண்டத்துக் கப்பாலாய்ச்
சோதி வடிவினதாய்த் தோன்றுமொரு சக்திசெயல் !
அச்சக்தி மானிடரின் ஆழ மனத்துள்ளே
நிச்சயமா யுண்டதனை நீருணர வேண்டுமெனில்
அந்தவழி சொல்வேன் அவைகேட்க ! எப்போதும்
வந்தவழி தன்னை மறவாத வாழ்க்கை !
உளத்தியற்கை காத்தல் ! உயர்ந்ததவம் செய்தல் !
களிவுறவே மற்றவரைக் கண்டிடுதல் ! நச்சுச்
செயற்கைய தண்டாமல் சேர்ந்து புவியை
இயற்கை வழியில் இனிதெனவே காத்திடுதல் !
மாமாயக் காமங்கள் மங்கத் தெளிவுபெறல் !
நாமாக நாமிருத்தல் நாளும் மரம்நடுதல் !
இன்னுமுண்டு கூற ! இவையெல்லாம் நாம்செய்தால்
நன்மை யதுசேரும் ! நாடுயரும் ! இங்கதற்குப்
பின்னால் உலகே பிறந்துரைக்கும் ! "ஆகாகா !
என்னே இயற்கை எழிலெல்லாம் ! கண்டாலே
கன்னல் கரும்பாகக் காட்சி இனிக்குதென்றே"


-விவேக்பாரதி
27.01.2017

Popular Posts