காதலிரவில்

என்ன கண்மணி இன்னமும் தூங்கிட
   எண்ணம் இல்லையா ? என்னொடு சொல்லவா !
சின்னக் கண்களில் சிற்றிடை யில்புதுச்
   சின்னம் வைத்துன்னைத் தூங்கிடச் செய்யவா ?
இன்னு மென்னடி நாடக மென்னிடம் ?
   இன்சு வைதரும் மெல்லிதழ் தந்திடு !
மின்னல் போன்றவுன் கண்ணெனும் வாளினால்
   மீண்டும் என்னைகி ழித்துநீ தின்றிடு !

கால தாமதம் இன்னும்பொ றுக்குமோ
   காதல் நெஞ்சிலே தீயெனச் சுட்டிடச் ?
சேலை யோடுக னாவிலே நாளுமே
   சேர்ந்து வந்திடர் செய்கிறாய் கண்மணி !
ஞாலம் முற்றிலும் உன்னடி சேர்த்திட
   ஞாயி றாயொரு பார்வையை வீசடீ !
கோலப் புன்னகை தன்னையுங் காட்டடீ !
   கோவை வாயிலே கொஞ்சிம ழுப்படீ !

முத்தம் தந்துடன் மூன்றுல கத்தியும்
   முல்லை உன்விழி கண்டிடக் காட்டுவேன் !
மொத்தம் உன்னைநீ தந்திடும் நாள்வரை
   மோனம் கொண்டொரு நற்றவத் தாழுவேன் !
பித்துப் பைத்தியம் முற்றிட வுன்னெழில்
   பிஞ்சுக் கைதொட ஏங்கியே நிற்கிறேன் !
அத்தான் என்னநீ அன்புடன் கூப்பிடும்
   அந்நாள் காணவே நானுமி ருக்கிறேன் !

-விவேக்பாரதி
29.10.2016

Popular Posts