காகிதக் காடு

காகித மெல்லாம் மரங்க ளான
   காட்டை நான்கண்டேன் - என்
கனவினில் வந்த காகிதக் காட்டைக்
   கவிதையில் சொல்கின்றேன் !

பேனா எல்லாம் மரத்தின் தண்டாய்ப்
   பெருமை கொண்டிருக்கும் - அதில்
தேனாய் ஏந்திடும் காகித இலைகள்
   தேசுடன் அசைந்திருக்கும் !
மானாய்க் கவிதை கதைகள் எல்லாம்
   மாந்தும் பசிக்காக - அதைத்
தானாய் உண்ணும் அத்தகு காட்டின்
   தன்மை வியப்பன்றோ !

அத்தகு காட்டில் அமைதி யாக
   அழகாய் அமர்ந்திருந்தேன் - என்
சித்தம் எழுப்பும் சத்தத் துகளைச்
   சிறப்பாய் எழுதவந்தேன்
அத்தனை இலையும் அசைந்து தவழ்ந்தே
   அருகில் அழைத்தனவே - அதில்
முத்தம் பதித்துக் காகித இலையை
   முழுவதும் வாழ்த்திவிட்டேன் !

"காகிதமே நீ நன்றாய் வாழ்க
   காசினி உனைப்புகழ்க ! - உன்
வாகுடை அழகைக் கண்டிவ் வுலகம்
   வாழ்த்து வழங்கிடட்டும்
மோகத்தால் இன்று உனைமறந் தாலும்
   மொத்த உலகமுமே - உனை
வேகத் துடனே மதிக்கும் நல்ல 
   வேளை தூரமில்லை"

-விவேக்பாரதி
12.06.2017

Comments

Popular Posts