பயமயம்
கனவிலே நானொரு காட்சியைக் கண்டேன்
நினைவு துறந்தொரு நிலையினில் நின்றேன்
மாலை மயங்கி மதியவன் பிறந்த
காலம் எனலாம்... கண்மயங்கிப்போய்
பேருந் தொன்றில் பெரும்வழி தன்னில்
யாரும் உடனிலா தமர்ந்து நகர்ந்தேன்...
ஆள்நட மாட்டம் அதிகம் இல்லா
நீள்வழிப் பாதை நீண்ட திரவு...
பேருந் துள்ளே கூட்டமு மில்லை
பேருக் கென்றே இருக்கைக ளங்கு!
அதுவே பயந்தரும் அதற்கும் மேலே
அதிகம் அதிகமே அச்ச மெனக்கே !
-*-
மின்னி விளக்குகள் மிளிர்ந்தன திடீரென
மின்னித் துளிர்த்தவை மின்னுதல் நீங்கின!
மின்மினி போலவை மின்னி மறைந்தன
என்ன பயந்தரும் எனக்கந்த காட்சியும்!
ஓட்டு நர்வசம் ஓடினேன்! விளக்குகள்
காட்டும் நாடகக் கதையை வினவினேன்...
ஆட்டம் கண்டமின் இணைப்புகள் காட்டியே
வாட்டம் நீங்கும் வகைசிரித் தாரவர்..
என்றன் ஐயமும் எளிதினில் தீர்ந்தது..
நன்மை என்றுநான் எண்ணிய பொழுதினில்
சின்னவன் மிக பயந்து நடுங்கவோர்
மின்னல் அடித்தது! மிரட்டின இடிகளும்!
-*-
யானமர்ந்தி ருந்த இருக்கை அதிர்ந்தது "யாரவரோ
தானமர்ந் தென்றன் இருக்கையை ஆட்டுவ தாரெனவே"
நானுமங் கேயோர் நடுங்குங் குரலொலி நல்கிடவே
நானிலை நானிலை என்றார் பலபேர் நெளிவுடனே !
பின்னால் அமர்ந்தே விடுக்கென யாரோ பிடித்திழுத்து
முன்னால் ஒருஉதை விட்டதைப் போலென் முதுகுமங்கே
தன்னால் வலியினில் தாமுழன் றேதான் தளர்ந்ததுவே
என்னே கொடுமை!சீ ஏனிவை நேருதோ என்றனுக்கே !
வேகத் தடையோ வரவிலை ஆயினும் வேதனையால்
தேகம் தளர்ந்ததே தேவையோ ஈதெனத் தேறிநின்றேன்
ஆகும் இதற்கெலாம் யாரவர் காரணம் ஆய்ந்துரைப்பார்
சோகமும் அச்சமும் சேர்ந்தென துள்ளே சொலித்ததுவே !
-*-
ஜன்னலில் மாமழைச் சாரல்
என்னதா இஃதென எண்ண
இன்னொரு பேரிடி ! நெஞ்சம்
இன்னலி லாழ்ந்தது பாரீர் !
ஓரமாய்ச் சாய்ந்துகண் ணாடி
ஈரமும் வீழ்வதைப் பார்த்தேன்
கோரமாய் அதிலோரு கையின்
ஈரதோற் றத்தையும் கண்டேன் !
கண்களை நன்றுநான் தேய்த்துக்
கண்டிட அங்குடன் பிம்பம்
தண்ணிரின் கோலமே போன்று
கண்ணைவிட் டேமறைந் ததுவே !
-*-
இத்தனை நேர்ந்திட இன்னுமோர் அதிர்ச்சிதான் - பேருந்திலே
பத்தினி ஒருத்தியின் குரலொலி கேட்டதே - பேருந்திலே
கத்திய தாகா ஓகோ வென்றதப் - பேருந்திலே
மொத்த உடலிலும் மயிர்நட மாட்டமே - பேருந்திலே !
மற்றவர் யாருக்கும் கேட்டிட வில்லையே - அந்தவொலி
உற்றுநான் பார்த்திட கேட்ட தெனக்கே - அந்தவொலி
சுற்றிலும் பார்த்தேன் யாரும் எழுப்பவிலை - அந்தவொலி
அற்றைய நாளிலே அச்சத்தின் உச்சமே - அந்தவொலி !
அருகினில் வாடா அழகனே என்றது - பெண்குரலே
பருவத்துப் பெண்ணின் பதைப்புடைக் குரலது - பெண்குரலே
உருவமே இல்லை உணர்ச்சியின் எல்லையே - பெண்குரலே
ஒருநொடி எழுந்தேன் செவிகளில் விழவில்லை - பெண்குரலே !
-*-
நின்ற வாறு பேருந்தில்
நீண்ட தங்கே என்பயணம்
சென்ற பின்பு சிறுதொலைவில்
வந்த தென்றன் இறங்குமிடம்
கொன்று தின்ற பேருந்தில்
கடைசி யாக பார்த்திடவே
நின்ற இடத்தில் மீண்டுமந்த
பெண்ணின் குரலும் கேட்டதுவே!
முந்தி நின்று கொண்டேனே
முன்பு சென்று நின்றேனே
அந்தப் பெண்ணின் குரலொலியும்
பின்தொ டர்ந்து வந்ததுவே
இந்த நிலையும் தொடர்ந்திடவே
இருக்கும் பயணி எல்லாரும்
சிந்தை கேட்ட முட்டாளாய்
என்னைப் பார்த்தி ருந்தனரே !
நானி றங்கும் இடம்வரவே
தாவிச் சென்று இறங்கிவிட்டேன்
மேனி முழுதும் பயமெனுமோர்
மேன்மை துன்பம் பாய்ச்சிவரும்
தேனி சூழ்ந்த நிலைவிட்டு
தேகம் அமைதி கண்டதுவே
நானி றங்கி நடக்கையிலே
நடுங்கிப் போனேன் பாதியிலே!
-*-
நடந்திருந்த பொழுதினிலே நடுங்கிநானும் நின்றுவிடக்
கிடந்ததங்கே நானிருந்த அதேவண்டி ஆளுமில்லை
விடவிலையே என்னையந்த பெண்குரலும் மெல்லுருவாய்
திடக்கையை நீட்டிஎனைப் பேருந்திற் கழைத்துவே !
பயந்தபடி நான்செல்லப் படக்கெனவே அருகணைந்து
"மயங்கிவிட்டேன் உன்னழகில்" எனமொழிந்து நின்றதுவே
தயக்கமெனும் உணர்ச்சியதன் உச்சத்தில் நின்றநானும்
"பயந்துவிட்டேன் உன்னழகில்" பகர்ந்தேனே என்பதிலை
அருகிவந்து முத்தமிட ஆசைகொண்ட பெண்ணுருவோ
நெருங்கிவர நெஞ்சமெலாம் பயமோன்றே நின்றாட
"ஒருநிமிடம் பொறு"வென்றேன் உடனதுவும் ஒப்பிடவே
பெருங்கூச்சல் போட்டபடி தூக்கம்விட்டுக் கண்திறந்தேன் !
கண்விழித்த மறுகணமே காபியுடன் உள்நுழைந்து
"கண்டாயோ சொப்பனந்தான் கடுகிப்போ குளி"யென்றே
பண்போடு சொல்லிவிட்டு பக்கம்வந்து தாயெனுமோர்
பெண்தெய்வ மணைத்தாளே பெருமூச்சு விட்டேனே !
-விவேக்பாரதி
20.09.2015