மாணிக்கக் கூடை

பல்லவி :

கூடையி லேயொரு மாணிக்கத்தைக்
கூட்டிக் கொண்டு செல்லுகிறேன்
கூட வாருங்கள் - உயிர்களே
கூடி வாருங்கள் !

வாடையி லேகரும் வேளையிலே இந்த
வானைப் பிளக்கும் மழையினிலே
வாழ்த்த வாருங்கள் - கண்ணன்முக
வண்ணம் காணுங்கள் !

ஆலால நிறங்கொண்டான்
   ஆண்டவனின் உருகொண்டான்
நாலாயிர நாயகனும்
   நமக்கருள வந்துதித்தான் !

பட்சிகளே வாருங்கள்
   பாட்டெழுதித் தாருங்கள்
உச்சிதொடும் தென்றலிலே
   உரையெழுதிப் போடுங்கள் ! (கூடையிலே...)

வாசுதேவன் நடக்கையிலே
   வான்பிளந்து சிரிக்கையிலே
வாசுகியின் குடையினிலே
   வண்ணமோடு துஞ்சுகின்றான் !

நந்தகோபன் வீட்டினிலே
   நாளுமொரு சேட்டையெனத்
தொந்தரவு செய்துவந்தால்
   தொல்லையெனக் கருதாதீர் !! (கூடையிலே...)

பாடல் :  https://soundcloud.com/vivekbharathi/maanikakoodai

-விவேக்பாரதி
25.08.2016

Popular Posts