கவிதைக் கூடை

அங்கொரு மூலையில் அன்னை அமர்ந்தே
    அழகாய்க் கூடை முடைகின்றாள் - அவள்
அங்கைகள் மாறி ஆடும் நடத்தில்
    அடியேன் பூரிப் படைகின்றேன் !

தொங்கிடும் தோடுகள் கண்ணச் சுருக்கம்
    தொட்டுத் தொட்டு விளையாடும் ! - அதன்
கிங்கிணி நாதம் கேட்டுப் பழகிய
    கீற்றுங் கூடக் கவிபாடும் !

ஒட்டிப் போன கைகள் எங்கும்
    ஓடிய உழைப்பின் சின்னங்கள் - வாய்
விட்டுச் சிரிக்க விரியும் அதரம் !
    விழுந்த பல்லின் வண்ணங்கள் !
முட்டி மடக்கி முட்தரை தன்னில்
    முழுதாய் அமர்ந்து முடைகின்றாள் - அட
கட்டிளம் பருவக் கன்னியைப் போலே
    கட்டாந் தரையில் படுக்கின்றாள் !

"யாருக் காத்தா கூடை ?" என்றால்
    எல்லா முனக்கே என்கின்றாள் !
"சீருக் கா"வென நானுங் கேட்டால்
     சிரிப்பை வாயில் திண்கின்றாள் !
வாரிக் கிடக்கும் இன்பம் அள்ளி
    வாடா என்றே தருகின்றாள் - அருள்
மாரித் தாய்தான் கவிதைக் கூடை
    மகிழ்வாய் நாளும் முடைகின்றாள் !

-விவேக்பாரதி
10.04.2017

Popular Posts