பாட்டு மழு

மழைமேக மாகவும் கழைராக மாகவும்
      மண்மீது திரிவோனே ! - ஒரு
  மத்தளச் சத்தத்தின் சித்தத்தில் முத்தத்தில்
      மனமொன்றி மகிழ்வோனே !
இழையாத நூலிடை இடபாக மொன்றிட
      இன்பங்க ளருள்வோனே - வரும்
  இடரான யாவையும் துகளாகிப் போகவே
      இச்சைகள் போக்குவோனே !
நுழையாத மனமெங்கும் இதமாக ஆடியே
      நூதனம் ஆக்குவோனே - படர்
  நுதலோடு விழிகொண்டு திருநீறு மேகொண்டு
      நுண்நடன மாடுவோனே !
பிழையாடி டாமலென் பிஞ்சுப்பி தற்றலைப்
      பின்னிருந் தாட்டுவோனே - ஒரு
  பிறைசூடுந் தேவனே விடநாக மாலையை
      பீடுற்ற ணிந்தசிவனே !

அரிதான உடலோடு புரியாமல் வருகின்ற
      அழகுகள் வேண்டுமையா - சொலும்
  அர்த்தங்க ளில்லாத சொற்கட்டு வேண்டிடேன்
      ஆழக்க ருத்துவேண்டும் !
பெரிதான பொருளெதுவும் வேண்டிடேன் பெரிதெனப்
      பெற்றவுன் அடிகள்வேண்டும் - பலப்
  பெட்டகம் முத்தொடு வைரவை டூரியம்
      பெறுவதில் இச்சைகொள்ளேன் !
சரியான நேரத்தில் சலசலவெ னக்கவிச்
      ஜதிபோடும் நெஞ்சுவேண்டும் ! - ஒரு
  சாட்டையடி மீட்டியுளக் கேட்டினையும் நீக்கிமனம்
      சல்லாபம் தீர்க்கவேண்டும் !
விரிசடைக ளாடவே விண்ணோடும் மண்ணோடும்
      விந்தைமிக ஆடுமீசா ! - உயிர்
  வித்தாகும் தருணத்தில் உள்ளாடும் ஜீவனாய்
      வீற்றிருக் கின்றநேசா !

காலமா தேவனின் ஜாலமே கண்டுளம்
      கவலைப டைத்தல்வேண்டேன் - வெறும்
  கட்டங்க ளிட்டதனில் கொட்டடித் தேவாழ்ந்து
      கண்மூடும் வாழ்வுவேண்டேன் !
ஆலவிட மென்றாலும் அச்சங்க ளில்லாமல்
      அருந்திடும் நெஞ்சுவேண்டும் - உன்
  அன்பெனும் பார்வையில் வழிகின்ற ஜோதியின்
      ஆற்றிலே நீந்தவேண்டும் !
வேலைகள் யாதெனத் தெரியாமல் புரியாமல்
      வேதனைப் பட்டுநொந்து - வெறும்
  வெட்டியாய்த் தீர்க்கின்ற போழ்துகள் வேண்டிடேன் !
      வென்றிடும் பொழுதுவேண்டும் !
பாலனைக் காத்திடப் பாடலைக் கேட்டிடப்
      பல்லக்கில் ஏறிநீயும் - உன்
  படைசூழ பவளவாய் முழுவதும் நகைசூழ
      பவனிதான் வருதல்வேண்டும் !

கதறுதல் கேட்டதோ கண்ணுனக் கில்லையோ
      கதைசொன்ன மூன்றும்பொய்யோ - அட
  கடவுளின் திமிரிலே கால்நகர வில்லையோ
      கண்ணீரில் சுடரில்லையோ ?
விதவித நாடகம் ஆக்கினை யென்றெலாம்
      வித்தகர் எழுதிவைத்தத் - திரு
  விளையாடல் போலென்னைச் சோதித்துக் கதிசேர்க்கும்
      விதியினைச் செய்யுவாயோ ?
நதியூறுஞ் சடையனே நங்கைவா ழுடலனே
      நால்வரின் உற்றநண்பா - சிறு
  நாவலன் பாவலன் பாபாடும் பாலகன்
      நவில்வதைக் கேட்டிடாயோ ?
மதிசூடும் ஈசனே மரியாதை யாகவா !
      மடிசாய்ந்து பாட்டிசைப்பேன் - வர
  மறுத்துவிட் டாலுனை வெருட்டிடப் பாட்டெனும்
      மழுகொண்டு போர்தொடுப்பேன் !

-விவேக்பாரதி
26.04.2017

Comments

Popular Posts