உள்ளமெனும் ஊடகம்


உச்சிமீது தாவுகின்ற மந்தி யென்றனர் – காட்டில்
   உழலுகின்ற பேயுமென்று மொழிப கன்றனர்
மெச்சுதெய்வம் வாழும்கோயில் உள்ளம் என்றனர் – தம்பி
   மெத்தமாய்ப்ப டித்தவர்கள் சொல்லி வைத்தனர் !

உள்ளந்தன்னை நம்பியிங்கு வாழ்வ தேனடா – தம்பி
   உள்ளமுமோர் ஊடகந்தான் சொல்லு வேனடா !
கள்ளமுள்ள இரண்டினையும் நம்பி டாதேடா – கண்கள் 
   காணுகின்ற ஊடகமும் உள்ளம் போலடா !

ஐம்புலன்கள் சேகரிக்கும் நிருப ராகவே – நம்மில்
   அமைந்திருக்கும் மூளையிந்த மக்க ளாகவே
மொய்ம்புறவே சேதிதூக்கி நகரு மூடகம் – நித்தம்
   முணுமுணுக்கும் உள்ளம்!இது விந்தை தானடா !

பாடஞ்செய்ய சேதிதன்னைப் படிய வைத்திட – இந்தப்
   பாரிலுள்ள சிந்தனைகள் நினைவி ருத்திட
ஊடகமாம் ஆச்சுவகை உள்ளம் தானடா ! – மிக்க
   உணர்வுடைய ஆயுதமாம் ஆச்சு தனடா !

தூரமுள்ள கவிஞனுள்ளம் கவிதை ஆகுமே – அங்குத்
   துள்ளுகின்ற சேதிதன்னைக் கண்கள் வாங்குமே
சாரமுள்ள வார்த்தைபின்னர் மூளை சேர்வதோ – உள்ளம்
   சம்மதித்த வார்த்தையென்று ணர்ந்து கொள்ளடா !

கதையளந்து கருத்துரைத்து வாழ்ந்தி ருப்பவர் – பக்கம்
   காதுசென்று சேதிசேர்க்கும் அலையின் வழியிலே !
அதையுணர்ந்து நன்மைதீமை யெனவி லக்கியே – உள்ளம்
   ஆழமான ஞாபகங்கள் ஆக்கி வைக்குதே !

நாடுவிட்டு நாடுதாண்டி பாடல் கேட்டிடும் – தம்பி
   நானுரைத்த காரணங்கள் புரிந்த தல்லவா !
பாடுகின்ற வானொலிபோல் அலையின் ஒலியிலே – செய்தி
   பகிருமுள்ளம் ஊடகமே தெளிந்த தல்லவா !

காணுகின்ற காட்சியோடு சத்தம் சேர்ந்திடில் – அந்தக்
   காட்சியென்றும் நினைவினோடு தங்கு மல்லவா !
ஆணிபோன்று பசுமரத்தில் பதியு மல்லவா ! – உள்ளம்
   அந்தவேலை செய்யும்!இது காட்சி ஊடகம் !

பெட்டிமுன்ன மர்ந்துகொண்டு பார்த்தி ருக்கிறாய் – தம்பி
   பெருமையுள்ளம் இந்தக்காட்சி பெட்டி போலடா !
கெட்டிக்காரத் தனமிருக்க வெற்றி தானடா – தம்பி
   கெட்டிடாமல் ஊடகத்தைப் பார்த்துக் கொள்ளடா !

-விவேக்பாரதி !
19.12.2016

Popular Posts