வான வாழ்த்து

பேயென்று மழைவந்து வெளிநின்று பாடும்
    பேரின்பம் அலையாக நெஞ்சத்தில் மோதும்
தாயின்று வரம்தந்த திடியென்னும் நாதம்
    தாராள மாய்மண்ணும் மழைதன்னைச் சூடும் !
தீயென்னும் வெயில்மாய வரும்மின்னல் பாயும்
    தீம்நம்தம் எனத்தென்றல் மழையோடு ஆடும் !
வாவென்று பலர்கேட்ட மழைவந்த நேரம்
    வாழ்த்தாமல் தணியாது நெஞ்சத்தின் பாரம் ! 

*
வானம் வந்து தூறல் தந்து
       வாழ்த்தும் இன்ப நேரம்
   வாக்குள் சந்தம் பூக்கும் ! நெஞ்சம்
       வாட்டம் நீங்கி ஆடும் !
ஈனம் என்னும் வெய்யில் நீங்க
       இடியின் நாதம் கீதம் !
   இங்கே வீசும் தென்றல் குளுமை
       இமயம் போலத் தோன்றும் !
மோனம் மாயும் மோகம் ஏறும்
       மோத்தம் இன்ப மூறும்
   மோதும் காற்றில் போதம் பாயும்
       மோசம் நீங்கிப் போகும்
கானம் கேட்கும் கவிதை பூக்கும்
       காலம் வசந்த மாகும்
   கவலை தீரும் கடமை நேரும்
       கண்நீர் பெருகி ஓடும் !

-விவேக்பாரதி
18.05.2017

Popular Posts