கண்ணம்மா

சின்னஞ் சிறுவயதில் - வந்து 
   சீறும் கனவுகளில் 
என்னைப் படுத்திடுவாள் - கவி 
   எழுத்து உரு கொண்டிடுவாள் 
இன்னும் வளர்ந்திடவே - உரு 
   இயக்கம் மாற்றிவிட்டாள் 
கன்னி வடிவானாள் - நான் 
   காதலும் கொண்டுவிட்டேன் ! 

பாட்டைப் பிதற்றிடிடினும் - பல 
   பாடம் புகட்டிடினும் 
சேட்டை நிகழ்த்திடினும் - சினம் 
   சேரா உயர் அகத்தாள் 
ஓட்டை எங்கு கண்டாள் - மனது 
    ஓரம் அமர்ந்து கொண்டாள் 
நீட்டும் நினைவினிலே - எனை 
    நித்தம் நனைத்திடுவாள் ! 

காதலில் தொட்டுவிட்டால் - கொஞ்சும் 
   கண்ணில் முரண்பிடிப்பாள் 
மோதலில் விட்டுவிட்டால் - வந்து 
   முதலில் அரவணைப்பாள் 
பாதியில் வந்தவள் தான் - என் 
   பாதி என்றாகி விட்டாள் 
ஆதியில் வந்திருந்தால் - உயிர் 
   அனைத்தும் கொண்டிருப்பாள் ! 

விட்டுப் பிரிவம் என்றால் - உயிர் 
   வீங்கி வியர்த்திருப்பாள் 
கட்டித் தழுவச் சொன்னால் - உடன் 
    காதல் கொடுத்திடுவாள் 
சொட்டும் அமுதத்தினை - இதழ் 
   சொப்பில் வழங்கிடுவாள் 
ஒட்டி உயிர்வளர்வாள் - என் 
   ஒருநிழல் ஆகிடுவாள் ! 

என்னை அறிந்திடுவாள் - பழி 
   ஏறும் பொழுதினிலே 
முன்னம் எனைக் காப்பாள் - பகை 
    மூளும் வகை தீர்ப்பாள் ! 
என்னைப் பிரிந்தாலும் - உயர் 
   ஏற்றி வைத்துவிட்டாள் 
அன்னவள் காதலினைத் - தனி 
   அற்புதம் என்று சொல்வேன் !!

அவள் பெயர் கண்ணம்மா 
அவள் தான் கண்ணம்மா !! 

-விவேக்பாரதி 
22.07.2017

Popular Posts