சக்தி உணர்வு

மனதுக்கு ளவாளாலே மணியோசை கேட்கிறது
மகிழ்வெய்தி என்நெஞ்சம் தானாகப் பூக்கிறது
மகமாயி மாகாளி ஆதீப ராசக்தி
மகிமைகள் எண்ணிவிட என்னுள்ளே புதுசக்தி !
மண்மீதிங் கவளின்றி மலரேது கனியேது
மாடப்பு றாவேது மணமேது காயேது
மனத்தாட்டம் மாய்க்கின்ற மங்கைய ளவருளின்றி
மதியேது மகிழ்வேது மன்னுகின்ற கவியேது ?
மரமேது கனியேது வளியேது புனலேது
மண்டுமிருட் காட்டுக்குள் விலங்குகளுந் தாமேது ?
மரணப்ப டுக்கைதனில் நாஞ்சென்று வீழ்கையிலும்
மார்போடு தாங்கிநம்மை மன்னித்து யிர்காத்து
மகிழ்த்து வாளே

அனலான சிறுபார்வை அகன்றோடும் தீயெண்ணம்
அழகான நுதல்காண ஆயிரக்க விப்பண்ணும்
அதுவாக வீழாதோ அகிலாண்ட நாயகியின்
அதிமதுர இதழ்காண ஆச்சர்யம் நேராதோ ?
அல்லோடும் பகலோடும் காலங்கள் தானோடும்
அந்திவரும் நிலவோடும் ஆதவனு மேயோடும்,
அபிராமி சிவகாமி சிந்துகின்ற அருளோசை
அண்டம்பி றழ்ந்தாலும் மாறாத உயிரோசை !
அவளாலே வையத்தில் ஆட்டங்கள் பாட்டங்கள் !
அவளாலே அகிலத்தில் விளைபயிரி னீட்டங்கள் !
அவளாலே அரசாங்கம் அவளாலே அருளோங்கும் 1
அவளின்றி அசைந்திடுமோ அணுகூட வகிலத்தில் !
அறிந்தி ருப்போம் !

உனதென்று மெனதென்றும் நீசொல்லும் செய்கைகள்
உனதல்ல எனதல்ல உண்மைப்பொ ருள்சக்தி
உமையம்மை செய்வினைகள் நாமந்த மகமாயி
உருட்டியே விளையாட ஏற்றவினைப் பொம்மைகள் !
உன்னதம வள்தானே உயிரோட்ட மவள்தானே
ஊறுறும் காலத்தில் உன்வாயு ரைக்கின்ற
உயிரான உளத்தோசை யெல்லாம வள்தானே
உணராத மாந்தருயிர் உறக்கமும வள்தானே !
உற்சாக மவள்தானே உத்வேக மவள்தானே
ஊருக்குள் பாருக்குள் நல்லரணு மவள்தானே
உந்துதலு மவள்தானே ஊசிமுனை மீதேறி
உல்லாசம் சல்லாபம் உள்ளூற வந்தெத்தி
உயர்த்து வாளே

கனவென்றும் நனவென்றுங் காட்சிப்பி ழையென்றுங்
கருவென்றும் உருவென்றும் காணக்கி டைக்காத
கடவுளதன் உடலென்றும் ! கவியாகிக் கருத்தாகிக்
கண்டங்கள் அண்டங்கள் ஆள்கின்ற விசையென்றுங்
களவாட முடியாத நிலையான சொத்தென்றுங் !
காசினியின் வித்தென்றுங் கட்டற்ற நதியென்றுங்
கருணையின் நிதியென்றுங் கன்னியத்தின் விதியென்றுங்
கண்ணுக்கு ளொளியென்றுங் கவலைதீர்ப் பவளென்றுங்
காத்யாய ணிப்பெயரைக் காலமெல்லாம் சொல்லிடுவார்
கருமாரி யுருமாறி நமைவந்துக் காப்பாற்றிக்,
கடமைகள் உடைமைகள் கர்மத்தின் பயனென்று
கருதுதளை யெல்லாமுந்த் தாக்காமல், வந்தவைகள்
களைவாள் போற்றி  !!

-விவேக்பாரதி
28.10.2016

Popular Posts