நிலைமை உருக்கம்

சித்தம் தெளிந்துவிட்டால் சிவப்பதவி உண்டென்பார்
புத்தம் புதுப்பிறவி பூண்வோம் எனச்சொல்வார்
நித்தம் அலையுமனம் நீதி அடையுமென்பார்
முத்தி கிடைத்திருக்கும் முழுமைவரம் வருமென்பார்
அப்படி யொருதெளிவை அடியேன் கண்டறியேன்
செப்பும் மறைபொருளின் சேதி கேட்டறியேன்
ஒப்பில் அறிவுடையார் ஒழுக்கம் கற்றறியேன்
இப்புவியி லேன்பிறந்தேன் இதுநாள் வரையறியேன்
ஆராயா தேற்றிடுதல் ஆளநி னைத்திடுதல்
பாரா துறவுகொளல் பற்று வளர்த்தலிவை
தேரா அறிவுடனே தினமும் இயற்றுகிறேன்
கூராய் மதிதீட்டிக் கொள்கை வளர்த்திலன்யான்
யாதெனது வாழ்க்கை யாதென் வழிப்பயணம்
ஏதும் புரிந்தறியேன் ஏழ்மைத் தவிப்பெய்தி
போதம் மறந்தென்றன் போக்கால் நிலத்தாய்க்குச்
சேதம் விளைப்பதுவும் செய்திருப்பேன் ! நானறியேன் !
என்னையரு ளாழியிடை யிட்டெடுத் தெனக்குன்றன்
மின்னேர் ஒளிசேர்ப்பாய் மீண்டெழுந்த வானிறையே ! 


-விவேக்பாரதி
17.03.2017

Popular Posts