சூல விருத்தம்

காப்பு :

சக்தி கரத்தினிலே சஞ்சரிக்கும் சூலத்தைப்
பக்தி முகிழ்ந்திடவே பாடுகிறேன் ! - அக்கறையாய்ச்
கண்ணன் செயுங்கவியைக் காத்திடுவான் ! சந்தங்கள்
பண்ணமைக்க முந்துமெனைப் பார்த்து !

நூல் :சிவனார் இடத்திலமர் பவதாரணி! வீரம்
   சிந்திடும் யுவ மோகினி !
தவறாது எனக்குதவும் அரிவாகிணி! அமரர்
   தாம் தொழும் எழில் யாழினி !
அவதாரணி! பக்தர் அழுகைகள் தீர்த்திடும்
   ஆனந்த ரதி நாரணி !
கவிதை தருங்குமரி ! கார்த்திகை ! ரக்‌ஷினி !
   கையேந்தும் எழில் சூலமே !

ஏகனின் பத்தினி ஏழையைக் காத்திடும்
   எங்களின் ஆகர்ஷணி !
தோகைமயில் வேலவன் தொழுதிடும் சங்கரி !
   தொல்லை தீர்க்கும் நந்தினி !
மேகநிற மாதவன் மெச்சிடும் சோதரி !
   மேன்மை நல்கும் பூரணி !
சேகரி, சாமுண்டி, உஜ்ஜயினி, கையினில்
   சேர்ந்தாடிடுஞ் சூலமே !!

அம்பிகை அகிலாண்ட நாயகி காயத்ரி
   அசுரரின் சம்ஹாரினி
தும்பிக்கை நாதனை ஆக்கிய திருமேனி !
   தூய நற்றவ தர்ஷினி !
கும்பிடும் அடியவர் குறைதீர்க்கும் ரோஷினி
   குற்றமில்லா பந்தினி
எம்பிரான் தாளுடன் சேர்ந்தாடும் தேவி கை
   ஏந்திடும் ஒருசூலமே !

மேனியில் மனமென்னும் பேயதுவும் ஆக்கிடும்
   மேன்மையில் ஆணவத்தைத்,
தானியற்றுஞ் செயலில் தரணியில் வருகின்ற
   தாழ்வுடைக் கன்ம நோயை,
ஏனென்று தெரியாமல் எல்லோரையும் தாக்கும்
   ஏற்றமில் மாயை தன்னை,
வானத்து ஜோதியாய் வந்திருள் நீக்கிடும்
   வன்மை பூணுஞ் சூலமே !

ஏங்கியோர் அறிவிலா ஏழையாய் ஊமையாய்
   எங்கோ இருந்த அடியன்
வீங்கியழும் நேரத்தில் வீரையும் தோன்றியே
   வித்தைகள் நல்கும் நேரம்
ஆங்கவன் நாவிலே அருள் பிரணவப் பொருள்
   அம்பிகை எழுதுதற்குத்
தாங்கிய தூவலே ! தாய்விரல் படுவதால்
   தாமொளிரும் பொற்சூலமே !

பொற்புடைய புருவத்தில் இட, பிங்கலத்தோடு
   பொலிகின்ற சுழுமுனையுமாய்
விற்பனம் செய்கின்ற நாடியின் சந்திப்பில்
   வித்தக நெற்றி தன்னில்
அற்புதச் சக்கரம் ஆள்கின்ற சக்தியின்
   அருளெனத் தோன்றியிங்கே
நிற்றலும் சுற்றலும் தீதை அழித்தலும்
   நிகழ்த்திடும் பெருசூலமே !

மேதினியை எந்நாளும் காக்கின்ற நற்றவம்
   மேற்கொளும் சிவ பாகினி !
தீதினைத் தீர்த்துடும் கருமாரி சிவநாரி
   திருதேவி தாக்‌ஷாயணி !
காதலின் கல்யாணி இந்த்ராணி மாகாளி
   கருணையின் மறு ரூபிணி !
வேதனின் வம்சத்தில் சதி தேவியின் கையில் !
   வென்றிடுந் திருசூலமே !

ஏறி மகிஷாசுரன் செய்திட்ட தீமையால்
   ஏழுலகும் அஞ்சி நிற்கத்
தூறிடும் புயலதன் வல்லமை கொண்டொரு
   துர்கை எழுந்து நிற்கக்
கூறும் இழி அசுரனைக் கொன்று உலகு காத்தவள்
   கூற்றினை ஒத்த போதில்
ஏறியவள் கைகளில் நின்ற நற் சூலமே
   ஏற்ற வீ ரச் சூலமே !

வீரத்தின் வித்தெனத் தன்னரும் மைந்தனின்
   வினை வெல்ல வேல் தந்தவள்,
பாரினுக்கு அன்னையாம் பார்வதி கையொடு
   பலவாறு திகழ்சூலமே !
சோரர்க்கும் ஆண்மையின் சொத்தினை நல்கியே
   சோதனை செய்யும் உமையின்
வீரக் கரஞ்சேர்ந்து வித்தகம் காட்டிடும்
   விந்தையாய் ஒளிர்சூலமே !

ஒளிதிகழ் முத்தொடு மணியினைப் பூண்டுதான்
   ஒங்கிடும் திரிசூலமே !
 வளியில் சுழன்றிடும் முகிலோடும் இலையோடும்
   வானோடும் சுழல் சூலமே !
களியுறக் கூத்திடும் போதிலே காளியின்
   கைகளில் சுடர் சூலமே !
தெளிவு தந்தெங்களை ஆள்கின்ற தேவியாம்
   உமையவள் கைச் சூலமே !

-விவேக்பாரதி
17.04.2017

Comments

Popular Posts