நிகர்த்தவன்


"அஹம் பிரம்மாஸ்மி" நடத்திடும் கிளர்ச்சி !!

ஞான சுதந்திரம் நாளும் படைத்தவன்
      ஞாயிறை ஒத்தமுகம் - பெரும்
  ஞாலம் இயக்கிடும் தேவி தமக்கொரு
       நன்மகன் ஆதலினால்
யானை முகத்தனும் வேலனும் அக்கறை
      யாண்டும் இயற்றுவதால் - மலை
  ஆலய மாபதி ஐயன் கரத்தினில்
      அன்பைப் பதிப்பதனால்
கானில் இருந்திடும் காலங் கொடுத்திடும்
      கடமை அனுபவங்கள் - வரும்
  கவிதையில் என்னுயிர் வனிதை எனத்திதழ்
      காளி கொடுப்பதனால்
ஜானகி ராமனின் அம்புகள்  ஒத்திடும்
      சொற்கள் இருப்பதனால் - நான்
  சாமி நிகர்த்தவன் பூமி புரப்பவன்
      தேவர் இனத்தவனே !

ஆலயம்  ஒத்திடும் அன்பர்கள் நெஞ்சினை
      ஆண்டு கிடப்பதனால் - என்
  ஆற்றலிலே பல மாற்றம் படைத்திடும்
      அற்புதம் செய்வதனால்
மாலயன் அரனென மூவரின் செயலினை
      மண்ணில் இயக்குவதால் - பலர்
  மனமெனும் ஊரினில் கற்பனை யாய்ப் பல
      மாயம் நிகழ்த்துவதால்
காலமெ னுங்கதை என்னைப் படுத்திடக்
      கடும்வலி காட்டுவதால் - ஒரு
  கல்லெனத் தேகம் கனன்றெழும் ஆவியும்
      காட்சி கொடுப்பதனால்
ஜாலம் இயற்றிடும் சங்கரி என்குரல்
      சாதகம் கேட்பதனால் - நான்
  சாமி நிகர்த்தவன் பூமி புரப்பவன்
      தேவர் இனத்தவனே !

அக்கினி சுக்கிரன் வாயுவும் குருவும்
      அண்டி நெருங்குவதால் - என்
  அதிர்வினில் ஆயிரம் பொடிபட வார்த்தையின்
      அண்டம் குலுங்குவதால்
மக்களின் மீதுயர் மண்ணிதன் மீதிலும்
      மதிப்பைச் செலுத்துவதால் - அவர்
  மகிழ்வினை நாளும் முகிழ்ந்து சுவைத்திடும்
      மனமதைப் பெற்றதனால்
பக்தியும் பாசமும் கர்மத்தில் வைத்திடும்
      பண்பதைக் கொண்டதனால் - எது
  பக்குவம் என்று புரிந்தலை யாமல்
      பாதை வகுப்பதனால்
சக்கரை தேங்காய் பட்சனம் என்னும்
      சகலம் விரும்புவதால் - நான்
  சாமி நிகர்த்தவன் பூமி புரப்பவன்
      தேவர் இனத்தவனே !

-விவேக்பாரதி
31.07.2017

Comments

Popular Posts