கருவறுக்கும் கயவர்கள்


"கருவறுக்கும் கயவரையா பெற்றெடுத்தாய் அம்மா ? - உன்
    கண்ணறுக்கும் கள்வரையா பெற்றெடுத்தாய் அம்மா ?
உருவறுக்கும் உளுத்தரையா பெற்றெடுத்தாய் நீயும் ?" - மன
    உணர்விழக்கும் மக்களையா பெற்றனளென் தாயும் ?
பொருளிருந்தும் இல்லையெனும் புல்லரையா பெற்றாள் ? - அவள்
    பொய்சொல்லி ஏய்க்கின்ற திருடரையா பெற்றாள் ?
மரமழித்துக் காடழித்து மாளிகைகள் சேர்க்கும் - வீண்
    மனிதரையா பூமித்தாய் பெற்றெடுத்தாள் ? சொல்வீர் !


நதியழிக்கும் நீசரையா பெற்றனளென் பூமி ? - நில
    நலமறுக்கும் மாந்தரையா பெற்றனளச் சாமி ?
விதைத்தவனை வதைகளத்துக் கனுப்பிடவா பெற்றாள் ? - பல
    வியாபாரம் செய்கின்ற நரிகளையா பெற்றாள் ?
சிதைகின்ற முகங்களையா தாய்பூமி இங்கே - மிகச்
    சிறப்போடு வாழ்கவென பெற்றெடுத்தாள் ? என்றும்
விதியென்னும் சதிசொல்லி பயிர்தனையே மேயும் - பொய்
    வீணரையா எம்மன்னை பெற்றெடுத்தாள் ? சொல்வீர் !

சகித்தபடி வாழ்கின்ற ஏமாளி யாக - நாம்
    சகமீதில் வாழ்கவென அவள்பெற்றெ டுத்தாள் ?
தகிக்கின்ற நெஞ்சோடு தண்ணீரை யிட்டு - இனத்
    தன்மைதமை மறப்போரை அவளும்பெற் றாளா ?
முகிழ்கின்ற மலர்மணத்தை நுகராத வண்ணம் - பெரு
    முகில்போல உருவாகும் மாசினையா பெற்றாள் ?
அகப்பேயைக் கொல்லாமல் அதன்போக்கில் ஆடும் - மன
    மடக்காத கோழையையா அவள்பெற்றாள் ? சொல்வீர் !

எம்மன்னை பெற்றதெலாம் புலிக்கூட்ட மன்றோ ? - வலி
    என்றைக்கும் தீராத அரிக்கூட்ட மன்றோ ?
அம்மையவள் பெற்றதெலாம் முத்துக்க ளன்றோ ? - அவள்
    ஆருடலில் உற்றதெலாம் பவளங்க ளன்றோ ?
நம்மண்ணாள் பெற்றதெலாம் தேவர்க ளன்றோ - உடல்
    நடுங்காத வீரர்கள் சூரர்க ளன்றோ ?
செம்மைநிலம் பெற்றதெலாம் உயர்மக்க ளன்றோ ? - பழி
    சேராதார் ! உண்மைகள் சொல்லுபவ ரன்றோ ?

அன்னையவள் வாடுகையில் சேய்மகிழ லாமோ ? - நம்
    ஆட்டத்தால் அவள்பெருமை சீர்குலைய லாமோ ?
மென்மைமனங் கொண்டவளைச் சோதிக்க லாமோ ? - அவள்
    மேல்தீயை நாம்வைத்துச் சாதிக்க லாமோ ?
உன்னதத்தாய் பெற்றவரே ! உயர்வாகச் சேர்வோம் ! - இனி
    உழுங்காடு நீர்,வானம் காக்கும்வினை செய்வோம் !
என்னருமைச் சோதரரே ! ஒன்றாயி ருப்போம் ! - தாய்
    எழில்பெற்று மகிழ்வுற்று என்றுஞ்சி ரிப்பாள் !

கேட்போர்க்குப் பொருள்கொடுப்பொம் ! கேண்மைவ ளர்ப்போம் ! - குணக்
    கேடுதரும் பொய்சொல்லல் இழிவென்று கொள்வோம்
ஊட்டமென நீர்பாய நதிமண்வி டுப்பொம் - பசும்
    உழவுக்கு நிலம்நீரும் ஆட்கள்கொ டுப்போம் -
ஆட்டமிடும் ஆசையினை நெஞ்சத்த ழிப்போம் - நமை
    யார்வந்து சீண்டினாலும் அஞ்சாதெ திர்ப்போம் !
தேட்டமுடன் நம்மண்ணக் காத்துக்கி டப்போம் ! - தாய்
    தேவையெலாம் தந்தருள்வாள்! அமரம்ப டைப்போம் !

-விவேக்பாரதி
06.04.2017

Popular Posts