சக்தி நடம்

நடமிடு நங்கை வடிவினி லன்னை
   நம்முன் வருகின்றாள் ! - பல
   நன்மை தருகின்றாள் ! - அவள்
கடிகமழ் பாதம் இடும்நடம் கண்டால்
   கவிதைகள் வாராதோ ? - உள்ள
   கவலைகள் தீராதோ ?

தோகைம யூரம் வாகுடன் சிலிர்க்கத்
   தோன்றி நடிக்கின்றாள் - அம்மை
   தொல்லை முடிக்கின்றாள் ! - பெரும்
வேகமெ டுத்தே மோகன மாக
   வெல்ல நடிக்கின்றாள் - மழையாய்
   வேர்வை வடிக்கின்றாள் !

குங்கும ஜோதி எங்கும்ப ரப்பிக்
   கொண்டை குலுங்கிடவே - அவள்
   கூத்திடு கின்றாளே ! - எழில்
தங்கம ணிப்பூப் பங்கயம் மீதில்
   தமிழ்நட மிடுகின்றாள் ! - இந்தத்
   தளிர்மனத் துரைகின்றாள்

எங்கணும் வெற்றி பொங்கிடு மாறே
   எங்கள் தவத்தாய்தான் - இங்கே
   எழில்நட மிடுகின்றாள் ! - ஓ !
மங்கலம் அடடா மங்கலக் காட்சி
   மண்ணில் உயிர்க்குதம்மா - கண்டார்
   மனங்கள் சிலிர்க்குதம்மா !

ஒருபதம் தூக்கி ஒருகையு யர்த்தி
   ஓங்கி நடிக்கின்றாள் - மனத்தைப்
   ஒன்றிப் பிடிக்கின்றாள் ! - அவள்
திருவுருக் காட்சி தருவதற் கன்றோ
   திவ்ய ஸ்வரூபினியாய்த் - தெய்வத்
   தரிசனம் தருகின்றாள் !

படம் : சுதன் காளிதாஸ்

-விவேக்பாரதி
18.05.2017

Comments

Popular Posts