கணபதி கலித்துறை

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் பகலிரவாய்
நாலுந் தருகுவன் நன்மைசெய் வாய்மறை நாயகனே
தோலுஞ் சுருங்கிடத் தொண்டை செருமத் தொடர்ந்தழுதுக்
காலைப் பிடித்துக் கதறுகி றேனெனைக் காத்திடவே ! 


காத்திட வேயருள் பூத்திட வேயுன் கழலிரண்டை
ஏத்துகி றேனே எழுதுகி றேனெனை ஏற்றுகவே
பாத்தலை வாயென் பயமுந் துயரமும் பார்த்தலரச்
சீர்த்தநின் சேவடி பற்றுகி றேனவை தீர்த்தருளே !

அருளி னுருவமே அன்பின் வடிவே அழகுமையின்
திருவரு ளாலுயிர் பெற்றவ னேயென் திடத்துணையே !
ஒருவழி கூட அறிகிலெ னுன்றன் ஒளிர்பதத்தைச்
சரணெனப் பற்றுவன் சாவிலு முன்றனைச் சார்ந்திடவே !

சாரும் புகழும் பெயரும் பொருளும் சலுகைகளும்
கோரும் அடியேன் குணத்தைக் குழப்பிக் குறையிழைக்கா
தோரத் தெளிய உனதருள் கேட்பேன் ஒருமருப்பா !
சாரத் தினையே சரியென என்னுளில் சாற்றுவையே !

சாற்றிடும் சொல்லில் தவறுகள் நேர்ந்திடாத் தன்மையதாய்
மாற்றிய ருள்தரு வாய்நீக ணேசா மனத்திலுனைப்
போற்றிப் பணிந்துன்றன் பொன்னடி மேவிப் பொழிந்திடும்நீர்
ஆற்றுத லின்றி அழுதிடும் கண்ணீர் ! அணைத்திடவே !

அணைத்து மலைமகள் ஆசையில் செய்த அழகுருவே
மணத்திலு யர்மலர் கொண்டுன தன்படி மண்டியிட்டு
பிணக்கும் கவலையும் சோர்வும் பிணியும் பிரிந்திடவே
துணைக்கு மழைத்திட வந்தருள் செய்திடு தூயவனே !

தூய னிவனெனும் நற்பெய ரன்றித் துவண்டுவரும்
பேயெனும் போற்றிகள் பொய்ப்புகழ் ஏதும் பெறவிழையேன்
மாயவன் போற்றும் மருகனே தண்குளிர் மாமலைவாழ்
நாயகன் நாயகி மெச்சும் குழந்தையே ! நல்லவனே !

நல்லவ னேதவ முள்ளவ னேதினம் நன்றுசெயும்
வல்லவ னேயென் வழித்துணை யேயுனை வாழ்த்துகிறேன் !
அல்லும் பகலும் அகலா திருந்திடும் அற்பகுணம்
இல்லையென் றாக்கிட வேண்டுவன் ! என்றனுக் கின்பமதே !

இன்பப் பொருளை இளையவன் கற்றிட இன்னதென
அன்பொடு சொல்லிடென் றார்கழல் வீழ்ந்தே அரற்றிடுவேன் !
முன்வினை மாய முழுதும் புதிதாய் முளைத்தெழவே
புன்னகைப் பார்வை புரிந்திடு ! சேர்ந்திடும் புண்ணியமே !

புண்ணிய மேது பழியே தெனநான் புரிந்தறியேன்
நுண்ணிய செல்வமாம் நூல்பல கற்கும் நுகர்வறியேன்
திண்ணிய நல்லவ ரோடுக ளிக்கும் திறனறியேன்
பண்ணிலு னைத்தொழ வந்தனன் நான்சிறு பாலகனே !

-விவேக்பாரதி
06.02.2017

Popular Posts