முதுமை

முதியோர் மொழியில் முழுவறி வுண்டு !
மதித்தால் வளரும் மதி !
*
முதுமை என்பது முதுநிலை அடைதல்
முதுமை என்பது முற்றும் துறத்தல்
முதுமை என்பது முழுதாய் ஆட்டம்
முடிந்த பின்னர் முடங்கும் பம்பரம் !

ஆட்டம் விளங்காப் பிள்ளைச் சிறுமை
ஆடப் பழகும் பருவம் இளமை
ஆடும் பருவம் அதுவோ பொதுமை
ஆடி முடிந்த வாழ்க்கை முதுமை !

அவர்களிடம் கேளுங்கள் !

அறிவியல் பாடம் இல்லாமல் போயினும்
அனுபவப் பாடம் அதிகம் இருக்கும் !
வளைதளம் இயக்கத் தெரியா தெனினும்
வாழ்வை இயக்கும் வகைமுறை அறிவோம் !

காலில் முள்தான் தைத்தாலும்
கையில் பூச்சி கடித்தாலும்
கை வைத்தியம் தரும் பாட்டியைப்போல்
கைராசி மருத்துவர் கிடைப்பாரோ !

குடும்ப வழக்கம் சாத்திரங்கள்
குணங்கள், பேசும் முறைமை எல்லாம்
கற்றுக் கொடுக்கத்
தாத்தா போன்று கல்லூரி உண்டோ ?

"தாத்தா" "பாட்டி"
என்று
கனிவாய் ஒருசொல்
கூப்பிட்டால் போதும்,
அகிலத்தையே தரும்
அவர்களுக்கு,
நாம் என்ன தர இயலும் ?
அன்பின் மூட்டை
ஆயிரம் கொடுப்போம் !
இன்றிலிருந்தாவது......

-விவேக்பாரதி
21.04.2017

Popular Posts