உழவா ? இழவா ?


"உழவு நடக்கும் வீட்டில்
இழவு நடப்பதா ???" -வாலி


பச்சை வயலிடையே - இங்கே
    பாழ்பட்டு நொந்தவர் எங்களு ழவர்கள்
நச்சை அருந்தினரே - அவர்
    நஞ்சை பொசுங்கிடக் கண்டு துயர்கொண்டு
பிச்சை எடுப்பதுபோல் - மிகப்
    பித்துப் பிடித்துக் கதறுகிறா ராரிங்கே
இச்செயல் நின்றிடுமோ ? - நீர்
    இன்னமு தெங்கணும் வந்திடுமோ?


 காவிரி நல்வைகை - தண்ணீர்க்
    கடுகி நிறைந்திடும் நீர்ப்பொருநை
மேவிய நன்னாட்டில் - வயல்
    மேலாய்த் திகழ்ந்திட்ட பொன்னாட்டில்
ஏவும் வறட்சியினால் - இங்கே
    எங்கள் உழவர்கள் வீழுவதும்
கூவிக் கதறுவதும் - என்று
    குறைந்திடு மோவுளம் நிறைந்திடுமோ !

நெற்கலை ஆக்கிடுவார் - தன்
    நெற்றி வியர்வை பலயிழைப்பார்
 புற்களை நீக்கிடுவார் - வளிப்
    பூழ்தியி னோடுற வாடிடுவார் !
அற்புத மாயுணவை - இந்த
    அண்டமு முண்டிடத் தாங்கொடுப்பார்
தற்கொலை செய்யுவதோ - அவர்
    தவித்திடக் கண்மழை பெய்யுவதோ ?

நல்லர சாளர்களே - இவர்
    நலிந்திடும் காட்சியைக் கண்டிடுவீர்
கொல்லுமிக் கொடுமையினை - மதி
    கொண்டு தகர்த்திங்கு காத்திடுவீர் !
வல்லர சாகுவதும் - மிக்க
    வளமைகள் பொங்கிட வாழுவதும்
நெல்லுயிர் உழவர்கையில் - இதை
    நேரே உணர்ந்து செயல்படுவீர் !

-விவேக்பாரதி
31.12.2016

Popular Posts