விதை


உலகில் அனைத்தும் உருவாக்கி நிற்கும்
நிலையான சக்தி விதை !

காதலுக்(கு) அன்புவிதை காட்சிக்குக் கண்விதையாம்
மோதலுக்குச் சின்ன முனகல்விதை - நீதிக்குச்
செய்யும் நலம்விதையாம் சேர்கின்ற நட்புக்கோ
உய்யும் பழக்கம் உணர் !

வீரத்திற்(கு) ஆண்மைவிதை வீணான ஊழலுக்கு
நேரத்தில் செல்லாமை நேர்விதையாம் - ஈரமே
மழைக்கு விதையாகும் மண்ணில் புரட்சி
பிழைநீக்கும் உண்மை விதை !

உழவுக்கு நெல்விதையே ! உண்மைக்குச் சொல்லே !
விழைவுக்கோ எண்ணம் விதையாம் - கழையிசைக்குக்
காற்றுவிதை யாகும் ! கவிதைக்கு நெஞ்சத்தில்
ஊற்றெடுக்கும் தீயே விதை !!

-விவேக்பாரதி
05.06.2017

Popular Posts