நிலவிடம் கேட்பது

பார்க்கிறேன் ! உனைநான் - நிலவே
பார்க்கிறேன் உனைநான் ! - அவளைக்
கேட்கிறேன் உனைநான் ? - இடையில்
வேர்க்கிறாய் எதனால் ?

ரம்பையென்றே உரு கொண்டிருப்பாளோ ?
   ரதியின் வம்சத்தில் பிறந்திருப்பாளோ ?
அம்புவியில் அவள் எங்கிருப்பாளோ ?
   அழகியெலாம் தொழ நின்றிருப்பாளோ ?

ஜ்வாலை வெயில்விழும் மாலையின் பொழுது
   சாதகப் பறவையைத் தேடிடும் மனது
ஆலயத்தில் ஒரு சுடர்விழும் அழகு
   அங்கவள் கொள்வாள் விழிகளில் அமுது

மேகம் எடுத்திடும் உருவினில் இருப்பாள்
   மேனி சிலிர்த்திட மென்னகை சிரிப்பாள்
தோகை மயிலெனக் கூந்தலை விரிப்பாள்
   தொட்டவுடன் புது நாணத்தைத் தரிப்பாள் !

-விவேக்பாரதி
06.04.2017

Comments

Popular Posts