தமிழ்ச்சொல்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றி நிலம்தோன்றி
   விண்தோன்றி காற்றோடு மனிதரினம் தோன்றிவந்த
   காலத் திற்கும்
பல்லாயி ரத்தாண்டு முன்தோன்றி எழிலோடு
   நாவாடிப் படராழிச் சுடராகத் தமிழ்மாது
   பரவி நின்றாள்
அல்லோடும் பகலோடும் விளையாடி இளைப்பாறி
   உலகோரை ஆள்கின்ற தமிழ்த்தாயின் எழிலுருவ
   மதனைக் கண்டால்,
சொல்லாடும் பாத்திறமைச் சுடர்வீசும் நெஞ்சோடு !
   புதிதாகச் சொல்லவிய லாதவொரு சக்திவரும் !
   தமிழைச் சொல்வீர் !

தானாகத் தனியாக உருவாகிப் பெரிதாகி
   உயர்வான தமிழ்போல வேறெந்த மொழியுண்டு ?
   தமிழை யன்றித்
தேனாயி னிக்கின்ற வேற்றுமொழி உண்டாமோ ?
   இனியேனும் மக்களிடை தமிழ்பேசும் நல்லெண்ணத்
   தெளிவு காண்போம் !
மேனாட்டு வாழ்கைமுறை வழக்கங்கள் பார்போற்றுந்
   தமிழரவர் வாழ்கின்ற மண்மீதெ தற்கதனை
   மேவ லேனோ ??
வானாக வளியாக வளர்ந்தோங்கி நிற்கின்ற
. செந்தமிழர் வளமான வழக்கங்கள் பின்பற்றி
.. வாழ்தல் செய்வோம் !

-விவேக்பாரதி
28.10.2016

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி