ஆடவராக

ஆடவ ராகப் பிறப்ப தற்கேயோர்
   அருந்தவம் செய்திட வேண்டுமப்பா !
ஓடி உழைக்கும்மெய் பார்த்தலவோ இங்கே
   ஓங்கும் வளங்கள் பெருகுமப்பா !

வீட்டுக் கடித்தளம் தந்தவரார் ? மிக
   விந்தை யொளிர்ந்திட வாழ்பவரார் ?
கூட்டிப் பொருள்கள் கொணர்பவரார் ? பல
   கூற்றுக் கிரையென ஆகுவதார் ?

பொங்கும் அழுகை மறைப்பவரார் ? பல
   போட்டிகள் சந்தித்து வாழ்பவரார் ?
தங்கும் அமைதி தவழ்ந்திடவே, யிந்தத்
   தாய்த்திரு நாட்டினைக் காப்பவரார் ?

தந்தையும் அண்ணனும் தம்பியுமாய் உடன்
   தங்கிடும் வாழ்க்கைத் துணையவராய்
இந்தப் புவிதனில் பெண்ணி்ன் இனந்தன்னை
   இமையினைப் போலவே காப்பவரார் ?

பிள்ளைக்கு நல்வழி சொல்வதுமார் ? வரும்
   பிழைமிகு மெண்ணங்கள் கொல்வதுமார் ?
உள்ளுணர் வெல்லாமு முள்மறைத்தே பிறர்
   உணர்ச்சிக் குழைத்திடும் நல்லவரார் ?

தம்முடை ஆசைகள் தாம்மறந்தே இல்லத்
   தாரவர் ஆசை இயற்றுவதார் ?
செம்மை மிகுதொழில் வாணிபம் போலவே
   சாரங்கள் கூட்டிடும் வித்தகரார் ?

காதல் வளர்த்திடும் பெண்ணவள் மேலரும்
   காதல் மிகுத்திங் கலைவதுமார் ?
மோதலது பல நேர்ந்திடினும் சென்று
   முதலில் அணைக்கும் உயிர்களுமார் ?

காடு திருத்திக் கடிதுழைத்தே யிந்தக்
   காசினி யுண்டிடச் செய்பவரார் ?
பீடு மிகுந்திடும் ஆணினமே இந்தப்
   பேச்சை மறுப்பவர் யாருளரோ ?

ஆணுக் கிணையெனப் பெண்ணினத்தை வைக்க
   ஆதரவும் தந்த தாணினமே !
பூணும் சிறப்ப தினத்திலில்லை மக்கள்
   புரியும் செயலினில் உள்ளதடா !

-விவேக்பாரதி
03.12.2016

Popular Posts