நான் அழுவதெல்லாம்

நான் அழுவதெல்லாம்
உனக்குத் தெரியாதே
நான் மீனாய் அழுகின்றேன் !
நாளும் என் வலிகள்
உனக்குத் தெரியாதே
நான் மலராய்ச் சிரிக்கின்றேன் !

நான் அலைவதெல்லாம்
உனக்குத் தெரியாதே
நான் காற்றாய்த் திரிகின்றேன் !
நாள் சுழல்வதெல்லாம்
உனக்குத் தெரியாதே
நான் பம்பர மாகின்றேன் !

எனைக் காலமென்னும்
புதுச் செக்கினில் ஆடும்
எள்ளாய் ஆக்கிவிட்டாள் !
என் தோளிரண்டில்
பெருஞ்சுமை கொடுத்தே, அவள்
என்னைத் தேடவிட்டாள் !

வினையாம் அரக்கன்
எனை விரட்டிடவே, அவள்
விரைவாய் ஓடவிட்டாள் !
விடை யாதெனவே
அறியாதவிதம் எனை
வினாவில் மாட்டிவிட்டாள் !

எதைத் தேடுகிறேன்
எனத் தெரிந்துமே, அவள்
என்னைத் தேடவிட்டாள் !
என் கண்முன்னே
அதை ஒளித்து வைத்தே
எனை ஏங்க விட்டுவிட்டாள் !

அதை நான் தேடும்
வழியினில் எல்லாம்
எனை அழுதே பாடவிட்டாள்
அவளார் ? உமையாள்  !
எனையாளும் பராபரை
அழகாய்க் கதறவிட்டாள் !!


-விவேக்பாரதி !
 11.07.2017

Comments

Popular Posts