வாணிக்குக் கடனறிவுறுத்தல்

ஒளிமிகும் வாணி ! உன்றன்
    ஒண்பதம் பற்றிக் கொண்டு
களியுறச் சிலவே கேட்பேன்
    கடனெனச் செய்தல் வேண்டும் !
தெளிவுடன் வாழ்க்கைப் பாடத்
    தேர்ச்சிய தற்காய்ப் பள்ளி
வெளியிலெம் மாணாக் கர்செய்
    வேள்வியை அணித்துக் காப்பாய் !


தேர்வுகள் என்ப தெல்லாம்
    தேடியே பெறுவ தென்றும்
தேர்வுகள் என்ப துள்ளத்
    தெளிவினைத் தருவ தென்றும்
தேர்வுகள் வலிமை ஓங்கத்
    தேவையே என்றும் வெற்றி
வார்த்தைகள் அவர்நெஞ் சுள்ளே
     வார்த்தவர் வேள்வி காப்பாய் !

உன்னரும் பிள்ளை கட்கோர்
     உன்னதத் தேர்வென் றால
துன்றனுக் குற்ற தன்றோ !
    உடல்வலி, உள்ளத் திண்மை,
மின்னலா யெழுதும் ஆற்றல்,
    மீண்டெழும் ஞானம், கேள்வி
வென்றிடும் சக்தி தந்தே
    வேள்வியும் வெல்லக் காப்பாய் !

எண்ணிய விடையைக் கைகள்
    எழுதிடும் வேகம், தாளின்
நுண்ணிய கேள்வி கட்கும்
     நுண்விடை காணும் தன்மை
கண்ணிலே ஜோதி மற்றும்
    கருத்திலே கற்ற தெல்லாம்
வண்ணமா யிருக்க வைத்தல்
    வாணிநின் கடமை யன்றோ !

 சொல்லிய செயல்கள் செய்வாய்
    சொர்க்கமென் றாகும் நாடு
கல்வியில் லாயி ருட்டுக்
     கயமைபோம் ! விடியல் சேரும் !
வல்லமைக் கல்வி யாலே
    வளைப்பதவ் வமர மன்றோ !
சொல்லினுக் கிறைவீ ! மக்கள்
    ஜொலித்திடும் வகைசெய் வாயே !

- விவேக்பாரதி
02.03.2017

Popular Posts