இன்று புதிதாய்ப் பிறந்தோம்

பாரதி கலைக்கழகக் கவியரங்குக் கவிதை


இன்றுபுதி தாய்ப்பிறந்தோ மென்று சொல்லி
    இனிநடை மேற்கொள்வோம் ! வெற்றி திண்ணம் !
சென்றதினி மீளாது ! செத்த தைப்போய்
    சேர்த்திருத்திப் பேசுகின்ற சொற்கள் வேண்டா !
என்றென்றும் புதியவுயி ராகத் தோன்றி
    ஏதுமெண்ணாத் தூமனமாய் வைய கத்தில்
நின்றிடுதல் சக்திதரும் யோக மாகும்
    நித்தமதைப் பேணுவமேல் அழிவே சாகும் !


 நேற்றிருந்த மனமில்லை நினைவு மில்லை
    நகராமல் நெஞ்சத்தில் குடைந்தெ டுத்து
வீற்றிருக்கும் பொய்யில்லை புகழின் றில்லை
    வியப்புடனே புதிதாகப் பிறந்தோ மென்று
கூற்றுரைத்து வாழ்ந்திடுவோம் வன்மை யெல்லாம்
    கொடுத்திடுவாள் தாய்சக்தி ! பெற்று வாழ்வோம் !
ஆற்றலவள் தருகின்ற பெரும்பே றாகும்
    அவளருளால் சாகாமல் வாழ்தல் கூடும் !


எப்போதும் புதியவுடல் புதிய சிந்தை
    எந்நாளும் புதுப்பிறவி எய்து வோமால்
ஒப்பற்ற நன்நிலைகள் அடையக் கூடும்,
    ஒவ்வொன்றாய்ச் சொல்லுகிறேன் மனம்வெ ளுக்கும்
தப்பாகா எண்ணங்கள் அறிவிற் சேரும்
    தம்மைப்போல் மற்றவரைப் பார்க்கத் தோன்றும்
இப்பாரி லமரநிலை கண்டு வாழ்வோம்
    இன்றுபுதி தாய்ப்பிறந்தோ மென்று சொல்வோம் !


 யாரிங்கே பாக்கியவான் ? அறிவு ளோனா ?
    யாருக்கு மஞ்சாத நெஞ்சு ளோனா ?
பாருக்குள் யாவர்க்கும் ஈயு வோனா ?
    பலசெல்வங் கொண்டோனா ? இவைய னைத்தும்
சேருமாறு புதிதாய்த்தான் பிறந்தோ மென்று
    செப்புகின்ற சிந்தைதனை யுள்ளோ னாவான் !
வாருங்கள் நாடோறும் புதிதாய்த் தோன்றி
    வாழ்ந்திடுவோம் வாழ்த்திடுவோம் வளமே கொள்வோம் !


தினந்தோறும் புதிதாக வெள்ளி தோன்றும்
    திமிராக அதன்பின்னே திங்கள் தோன்றும்
இனந்தோறும் புதிதாக உயிர்கள் தோன்றும்
    இளமையிலே புதியனவாய்க் கனவு தோன்றும்
வனப்பெல்லாம் புதுப்பார்வை தன்னிற் றோன்றும்
    வாருங்கள் புதுப்பிறவி நாளுங் கொள்வோம் !
மனம்புதிது சொல்புதிது புதிதித் தென்றல்
    மலர்புதிது மணம்புதிது புதிதிப் பூமி !


கவிபுதிது கலைபுதிது புதுமை யன்றிக்
    காசினியில் பேசிடவும் பொருளுண் டாமோ ?

எவையெல்லாம் புதுமைகொளும் அவற்று ளெல்லாம்
    எழுகின்றாள் தாய்சக்தி காண்கி லோமோ ?
அவையெல்லாம் நாமாக மாறி நிற்போம்
    அன்றாடம் புதுப்புதுநற் சிந்தை கொள்வோம்
எவைபுதிதாய் பிறக்கிறதோ நம்முள் ளத்தில்
    எல்லாமே அவளருளும் புதுமை யன்றோ !

-விவேக்பாரதி
21.12.2016

Popular Posts