உறங்கா இரவு

உறங்கா திருக்கும் இரவுகள்தான்
    ஊருக் குள்ளே மிகக்கொடுமை
உறவால் நிகழ்ந்த பிரிவைச் சொல்லி
    ஊசி ஏற்றும் நினைவுடைமை ! 


கிறங்கிக் கிடக்கும் பொழுதுகள்தாம்
    கீழே வாழும் சொர்க்கநிலை !
இறங்கிய துக்கம் நினைத்துப் பார்க்க
    இயலா திருக்குஞ் சுத்தநிலை !

இதயத் துள்ளே நினைவலையும்
    இரும்பைப் போலே அடிக்கிறது !
கதவைத் திறந்த கண்ணில் தூக்கம்
    கண்ணீர் வழியாய்க் கரைகிறது !

நிதமும் மூடும் என்கண்ணின்
    நிழலும் மூட மறுக்கிறது !
வதமாய் நிகழ்ந்த வாழ்க்கைக் கணமோ
    வந்து வந்து நிறைக்கிறது !

ஏனென் றறியா வுள்ளந்தான்
    ஏழை போலச் சாய்கிறது !
வானின் கருத்த வண்ணம் போல
    வாழ்க்கை கண்முன் பாய்கிறது !

மானைப் போலக் கைகாலும்
    மாறி மாறிப் புரள்கிறது !
மீனைப் போலே உறங்கா விழிதான்
    மின்னல் போலத் தெரிக்கிறது !!

-விவேக்பாரதி
18.04.2017

Popular Posts