சக்தி காக்கிறாள்

சக்தி காக்கிறாள் சஞ்சலம் இல்லைகாண்
   சகல வெற்றியும் சங்கரன் நல்குவான்
பக்தி யேவினை யென்றுப ணிந்திடில்
   பாற்க டல்துயில் மாதவன் வாழ்த்துவான்
முக்தி கிட்டுமே மூஷிக வாகணன்
   மூல மென்பதை மொதமு ணர்ந்திடில்
துக்க மென்னடா கந்தவேள் காலிலே
   தூசு போல்பொடி ஆகுதல் திண்ணமே !

நீள்து யில்தனை சூரியன் நீக்குவான்
   நித்த மின்பமே சந்திரன் ஆக்குவான்
தாள்ப ணிந்திடில் வாயுவின் மைந்தனும்
   தன்று ணைதனை எங்ஙணும் நல்குவான் !
கேள்வ ரங்களை ஏசுவும் நல்குவான்
   கேடி லாவிதம் ஆவியைப் பன்னுவான் !
தோள்கொ டுத்திடும் அல்லாவின் நாமமே
   தோல்வி போக்கிடும் தோன்றிடும் வெற்றியே !

பூர ணத்துவம் புத்தமும் தந்திடும்
   புனித வாழ்வினை நற்சம ணந்தரும்
ஈர நெஞ்சமும் இங்குளோர் யாவரும்
   ஈடி லொன்றுதான் என்னுமோர் சிந்தையும்
தீரம் சத்தியம் என்பத னைத்தையும்
   திங்க ளாயொளிர் நம்மதம் சொல்லிடும்
சோரர் கள்சிலர் செய்வதே வேற்றுமை
   சொல்லி லுண்மைகொள் வாழ்க்கையுன் கையிலே !

-விவேக்பாரதி
15.05.2017

Comments

Popular Posts