உயர்வு தாழ்வு

உலகத்தில் உயர்வு தாழ்வு நிரந்தரமல்ல. ஒருவனுக்கு உயர்வாகத் தெரிகின்றவொன்று மற்றொருவனுக்குத் தாழ்வாகத் தெரிகிறது. ஒருவன் வெறுத்துத் தாழ்வென்று ஒதுக்கும் சிலவற்றை ஒரு சமூகம் உயர்வென்று போற்றுகிறது. இது மனித உளவியலில் பெரிய வியப்பொன்றுமில்லை. ஒரே மனிதனுக்குள்ளேயே ஒரு சமயம் உயர்வென்று தென்படும் ஒரு விடயம் மறுகாலத்தில் தாழ்வென்று ஆகுகிறது. இந்த பாகுபாடே பலசமயங்களில் மக்களது வாழ்க்கை முறையையே தீர்மானிக்கிறது. உயர்வு தாழ்வு பேதம் சாதிக்குள், மனித நிறத்திற்குள், செய்யும் தொழிலுக்குள், வணக்கும் கடவுள் மற்றும் முறைகளுக்குள், வசிக்கும் இடத்திற்குள் பார்த்தல் தீதென்றும் அதனைச் சாடியும் பல முன்னோர்கள் பாட்டுகளும், படைப்புகளும் அளித்துவிட்டுத்தான் சென்றுள்ளனர். ஆனால் அந்த வேறுபாடு மக்கள் மனத்திடை மறைந்ததா என்பது கேள்விக்குறியே ! அந்தக் கேள்விக்குறியில் எனக்கு உயர்வு தாழ்வென்று பட்ட பிறந்த சில ஆச்சர்யக் குறிகள் இதோ :

நெல்லுக்கு நீருயர்வு நேர்மைக்குச் சொல்லுயர்வு
பல்லுக்குத் தாடையின் பாங்குயர்வு – வில்லுக்குச்
சீறுங் கணையுயர்வு சின்னஞ் சிறுவருக்குக்
கூறிடும் நீதியுயர் வாம் !

ஊனுக் குயிருயர்வு ! ஊருக்கு ளாறுயுர்வு
வானுக்குத் தான்கொண்ட வாணுயர்வு – தேனெனு
மெச்சில் மலர்க்குயர்வு ! ஏறுமண் ணுக்குயர்வு !
உச்சத்து யர்வடக்க மோர் !

கல்விக் குயர்வு கலகமில்லா நற்சிந்தை !
செல்வத்திற் கீதல் செயுமுயர்வு ! – மல்லுக்
குயர்வங்கு வீழா வலிமையதாம் ! வாழ்வில்
முயற்சி யுயர்வாகும் ! முந்து !

பெண்ணுக் குயர்வு பெரும்பேறு ! விந்தைதரும்
பண்ணுக் குயர்வு பளிங்குசுதி ! – கண்நன்றைக்
காண்ப துயர்வு ! கவிதைக் குணர்வுயர்வு !
ஆண்மைக் குயர்வு துணிவு !

பிள்ளைக் குயர்வு பிழைகண்டு பின்னுணர்தல் !
வள்ளைக் குயர்வு வளக்குரலாம் ! – நள்ளிருளில்
வெள்ளை யொளியுர்வு ! வெற்றிடமே சுத்தவிடம் !
உள்ளத்துக் கிஃதே உயர்வு !

எண்ணுந் தவறுசுட்டின் ஏற்கா நிலைதாழ்வு !
பண்ணில் சுதியில்லாப் பாங்குதாழ்வு - மண்ணைச்
சுரண்டுதலுந் தாழ்வு ! சுவைபுளிப்பு தோசைக்
கரைத்தமா வின்தாழ் வது !

கரையான் மரத்திற் கமைந்ததொரு தாழ்வு
வரைகொளும் பொத்தல் வளத்தாழ் - விரையி
லிரண்டுகண்டு வேட்டை யிடல்தாழ்வு ! காதல்
வரம்பற் றிருத்தல்தாழ் வாம் !

நாட்டிற்கு ளூழலின் நாடக முந்தாழ்வு
வேட்டுவெடி வைப்பது வேதாழ்வு - நாட்டத்
துறைவிட் டகன்றுபிறர் தூண்டுதலால் கற்கு
மறைகுறை கல்விதாழ் வங்கு !

மனஞ்செல்லும் போக்கில் மதிவைத்தல் தாழ்வு !
சினத்துரைக்கும் வாய்ச்சொற்கள் தாழ்வு - கனவைப்
பகலிற்கா ணல்தாழ்வு ! பக்கத் ருரைவா
ரகங்காணல் தாழ்வே யறி !

பெண்ணுக்குத் தாழ்வெழும் பேராசை ! ஆணுக்கோ
மண்ணின்மீ தாசையே மன்னிடுதல் ! - தண்ணீர்க்
கமிழ்த்துங் குணந்தாழ் ! விலக்கணம றத்தல் !
தமிழுக் கிதுதானே தாழ்வு !


-விவேக்பாரதி
05.09.2016

Popular Posts