அரங்கம்

வாழ்க்கையெனும் நாகடத்தில் நாமெல் லோரும்
   வகைவகையாய் வேடமிட்டு நடிக்க வந்தோம் !
வீழ்தலிங்கு வீழ்ச்சியில்லை ! உயரத் தோன்றும்
   வீரமிங்கு வீரமில்லை ! நெஞ்சைச் சாடும்
சூழ்ச்சியிங்கு சூழ்ச்சியில்லை ! இடையில் காணும்
   சுகங்களிங்கு சுகங்களில்லை ! சுகத்தை மாய்க்க
ஆழ்ந்துவரும் துயரமதும் துயர மில்லை
   ஆகமொத்தம் நிலையான தெதுவு மில்லை !

குழந்தைவே டந்தரித்தோம் கூச்ச லிட்டோம் !
   குதிக்கின்ற பாலகனாய்க் குறும்பு செய்தோம் !
அழகான இளமையிலே அழிவில் லாத
   அழகுதேடிப் பாட்டிசைத்தோம் பறந்தி ருந்தோம் !
ஒழுங்கான குடும்பமெனும் பொறுப்பை எய்த
   ஓடுவதாய் நாம்நடித்தோம் ! உடலில் நெஞ்சில்
எழுகின்ற வெல்லாமே அடங்கிப் போக
   எமனுக்காய் நாம்நடித்து வாழு கின்றோம் !

கரையில்லா ஒருவேடம் நமக்கு வாய்க்கக்
   காலமெலாம் முயலுகிறோம் வாய்த்த வொன்றைக்
கரையில்லா நல்விதத்தில் நடித்தி டாது
   கடவுள்மேல் குறைசொல்லிக் கலங்கு கின்றோம் !
தரையில்தான் நாம்போடும் ஆட்ட மெல்லாம் !
   தரைவிட்டுப் போனபின்னே ஆடக் கூடும் ?
திரைவீழும் வரையாடி யிருப்போம் ! அந்தத்
   தினம்வந்தால் அடுத்தகூட்ட மரங்க மேறும் !

-விவேக்பாரதி
23.06.2016

Popular Posts