வென்றுவிட்டோம்

அறத்தினால் வென்று விட்டோம்
    அடுத்தினி ஒவ்வொன் றிற்கும்
பொறுப்புடன் ஒன்று சேர்ந்தெப்
    பொழுதுமே வெற்றி காண்போம் !
மறுப்பதவ் விறையென் றாலும்
    மானுடக் குறியென் றாலும்
ஒறுத்திடல் செய்யோம் ! அன்பால்
    ஓங்கிநல் வெற்றி காண்போம் !


அமைதியால் வென்று விட்டோம் !
    அரசுசெய் குற்றம் தன்னை
நமதுயர் மாண்பி னாலே
    நானிலத் தெடுத்து ரைத்தோம் !
குமைந்துளே கிடந்த துக்கம்
    குறைந்திட வென்று விட்டோம் !
இமயமே அதிர்ந்து போக
    இளைஞர்கள் வென்று விட்டோம் !

கூட்டமாய் வென்று விட்டோம் !
    குறைகளும் தீர்ந்தோம் ! வாய்மை
ஈட்டமாய் வென்று விட்டோம் !
    இனியதாய் வென்று விட்டோம் !
வாட்படை வில்லி னாலே
    வளைப்பதோர் வெற்றி இல்லை !
ஆட்படை கொண்டு வென்றோம்
    அறிவினால் வென்று விட்டோம் !

வாய்மையால் வென்று விட்டோம்
    வழக்கையெ திர்த்தோம் ! நம்மை
ஏய்த்தவர் வேர்த்துப் போக
    ஏற்றமாய் வெற்றி கண்டோம் !
வாய்த்தநல் அறிவி னோடு
    வலிமிகும் உணர்வை எல்லாம்
பாய்ச்சிநாம் வென்று விட்டோம்
    பாருக்கே எழுச்சி ஆனோம் !

ஒன்றிநாம் வென்று விட்டோம்
    ஒருகுறி ஒன்றே சிந்தை
என்றுரைத் தெழுந்து வந்தோம்
    எங்கணும் புகழ்ப டைத்தோம் !
இன்றுநாம் வென்று விட்டோம் !
    இனிநமக் கெங்கும் வெற்றி !
நன்றுசெய் தோமே ! தோழா !
    நாமினி களிப்போம் ! வாடா !
.
-விவேக்பாரதி
23.01.2017

Popular Posts