கண்ணன் தரிசனம்

கண்ணன் தரிசனம் கண்ட மனத்தினில்
   கற்பனைச் அற்புதங் கோடியெழும் - அவன்
வண்ண முகந்தனைக் கண்க ளிரண்டினை
   வார்த்தைகள் முத்திட ஆவல்பெறும் !

ஊது குழல்கொண்ட நாதனின் ரூபமே
   உள்ளும் புறத்திலும் ஆசைதரும் - வரும்
காதலிலே சிறு ராதையின் நெஞ்செனக்
   கவிஞன் மனமிங்கு மாறிவிடும் !

பீலிகொண்டான் மலர்மாலை கொண்டான் அந்தப்
   பிஞ்சு முகத்தில் சிரிப்புங்கொண்டான் ! - அடர்
நீல நிறவுடை கோல முடியெழில்
   நீட்டி மனமெங்கும் வாசங்கொண்டான் !

ஒரு விரல் கொண்டென்னைத் தீண்டிடுவான் மன
   உணர்ச்சியிலே எல்லை தாண்டிடுவான் - அன்று
பெருமலை சுமந்திட்ட விரலில் சொடுக்கிடும்
   பேற்றினைப் பெற்றிட வேண்டிடுவேன் !

-விவேக்பாரதி
12.05.2017

Comments

Popular Posts